சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கான தங்களது முழு ஆண்டு முன்னுரைப்பை 1 விழுக்காட்டிற்கும் 2 விழுக்காட்டிற்கும் இடையே உயர்த்தியுள்ளன.
முன்னதாக இது 0.5 விழுக்காட்டிற்கும் 1.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டு இருந்தது.
மூலாதாரப் பணவீக்கத்திற்கான முன்னுரைப்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அது 0 விழுக்காட்டிற்கும் 1 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 2.4 விழுக்காடாக ஏழு ஆண்டுகளில் காணப்படாத உச்சத்தில் எட்டியதை ஆக அண்மைய மாதாந்திர பயனீட்டாளர் விலை தரவு காட்டியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பயனீட்டாளர் விலைகள் தொடர்ந்து ஆறு மாதங்களாக ஏறுமுகம் கண்டுள்ளன.
தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகளின் அதிகரிப்பு, சில்லறை மற்றும் இதர பொருட்களின் விலை சரிவைப் பரவலாக ஈடுசெய்ததாக நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
எனினும், மூலாதாரப் பணவீக்கம் கடந்த மாதம் 0.6 விழுக்காடாக சற்று குறைந்தது. மே மாதம் அது 0.8 விழுக்காடாக இருந்தது. சில்லறை மற்றும் இதர பொருட்களின் விலை சரிவே இதற்குக் காரணம்.
எதிர்வரும் காலாண்டுகளில் சிங்கப்பூரில் மூலாதாரப் பணவீக்கம் தொடர்ந்து படிப்படியாக உயரும். எனினும், இரண்டாம் கட்ட (உயர்த்தப்பட்ட விழிப்புநிலை) நடைமுறையின்கீழ் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளதால் பணவீக்க உயர்வு சற்று மெதுவடையும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.
இவ்வாண்டு இறுதிவாக்கில் மொத்த பணவீக்கம் தணியும் என்று நாணய ஆணையமும் அமைச்சும் முன்னுரைத்துள்ளன.
கார்கள், வாடகை தங்குமிட வசதிக்கான தேவை வலுவாக இருப்பதால் தனியார் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகள் தொடர்ந்து மீட்சியுடன் இருக்கும்.
கார் விலைகள் அதிகரித்து வந்ததன் காரணமாக தனியார் போக்குவரத்து பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 14.9 விழுக்காடு உயர்ந்தது.
தங்குமிட பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 1.1 விழுக்காடு அதிகரித்தது. வாடகை வீட்டுச் செலவு உயர்ந்ததே அதற்குக் காரணம்.
இதற்கிடையே, சில்லறை மற்றும் இதர பொருட்களின் விலை ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 1.8 விழுக்காடு குறைந்தது. துணிமணிகள், காலணிகளின் விலை குறைந்ததே அதற்குக் காரணம்.
மின்சார, எரிவாயு செலவினங்கள் 1.8 விழுக்காடு குறைந்தன.
மொத்த பணவீக்கம் 1.5% உயர்வு
கார்கள், உணவு, பெட்ரோல், தங்குமிடம், துணைப்பாட வகுப்புகள் உள்ளிட்டவற்றுக்கு இவ்வாண்டின் முதல் பாதியில் குடும்பங்கள் கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆண்டு அடிப்படையில் மொத்த பணவீக்கம் 1.5 விழுக்காடு கூடியதே அதற்குக் காரணம்.
புள்ளிவிவரத் துறை நேற்று இந்தத் தகவலை வெளியிட்டது.
குடும்ப வருமானத்தைப் பொறுத்தவரை, கடைநிலை 20 விழுக்காட்டினருக்கான பணவீக்கம் ஆண்டு அடிப்படையில் 0.9 விழுக்காடு அதிகரித்தது. நடுநிலை 60 விழுக்காட்டினருக்கான பணவீக்கம் 1.4 விழுக்காடாகவும் மேல்நிலை 20 விழுக்காட்டினருக்கான பணவீக்கம் 1.9 விழுக்காடாகவும் உயர்ந்தது.