ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார் அக்ஷரா ஹாசன். பிரபல பாடகி உஷா உதூப் இவரது பாட்டியாக நடிக்கிறார்.
மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ், கலைராணி, ஷாலினி விஜயகுமார் என மேலும் பல பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படத்திற்கு சுஷா இசையமைத்துள்ளார்
"கதைப்படி, ஒரு கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்தவர் அக்ஷரா. புத்திக்கூர்மையுடன் செயல்படும் அவர், வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை அனுபவிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என விரும்புகிறார். எனினும், குடும்ப சூழல் அவருக்கு சில தடைகளை ஏற்படுத்துகிறது.
"இதையடுத்து தனது ஆசைகளைக் கைவிட மனம் இல்லாமல் தவிக்கும் அவர், சில முடிவுகளை எடுக்கிறார். அதன் வழி குடும்பம், சமூகம், தனது விருப்பங்கள் என அனைத்தையும் சமன்படுத்தி சாதிக்க முயற்சி செய்கிறார்.
"தன் விருப்பப்படி வாழ முயற்சி செய்யும் அவர் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை இந்தப் படம் சுவாரசியமாக விவரிக்கும்," என்கிறார் இயக்குநர் ராஜா ராமமூர்த்தி.
இந்தப் படத்தில் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
"அதிக படங்களில் நடிப்பதைவிட எனக்கேற்ற ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போதும் என நினைக்கிறேன். ராஜா ராமமூர்த்தி சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. அதனால் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்கிறேன்.
"சில கதாபாத்திரங்கள் நமக்காகவே உருவாக்கப்பட்டது போன்று தோன்றும். இந்தப் படத்துக்கான கதாபாத்திரம் என்னை அவ்வாறு நினைக்க வைத்துள்ளது," என்கிறார் அக்ஷரா.
மிக விரைவில் இந்தப் படம் நேரடியாக இணையத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.