கலை, இலக்கியத்துக்கான சிங்கப்பூரின் ஆக உயரிய விருதான கலாசாரப் பதக்கத்தைப் பெற்ற சிங்கப்பூரின் 130 மதிப்புக்குரிய கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய கண்காட்சி தி ஆர்ட்ஸ் ஹவுஸில் இடம்பெற்றுள்ளது.
"எங்கள் கலாசார பதக்கத்தின் கதை" என்ற இக்கண்காட்சியை கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
ஆர்ட்ஸ் ஹவுசின் தரைத் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த மின்னிலக்கக் காட்சி, விருது பெற்ற கவின்கலை, காட்சிக்கலைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் குறித்த காணொளிகள், வெளியீடுகள், பத்திரிகைச் செய்தி உள்ளிட்ட பல விவரங்களையும் கொண்டுள்ளது. மின்னிலக்கத் திரைகளைத் தொட்டு, விவரங் களைப் பெறலாம், காணொளி களைக் காணலாம்.
மேலும், கலாசாரப் பதக்கம் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், கலாசாரப் பதக்கம், பேனா, சான்றிதழ் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கியூஆர் குறியீடுகளை வருடி விருது பெற்றோர் குறித்த மேலும் பல தகவல்களை எங்கே பெறலாம் என்பதை அறிந்துகொள்ளும் வசதியும் உண்டு.
கண்காட்சியின் உள்ளடக்கம், ourCMstory.sg எனும் மின்னிலக்கத் தளத்தில் உள்ளது.
இத்தளம் புதிய நிகழ்ச்சிகள், படைப்புகளுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். இது மெய்நிகர் காட்சித்தளத்தையும் கொண்டுள்ளது.
தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து, கலாசாரப் பதக்கம் பெற்றவர்களுடன் பிற முக்கிய கலைஞர்களின் பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் இணைய கலைக் களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியிலும் தேசிய கலைகள் மன்றம் ஈடுபட்டுள்ளது.
சிங்கப்பூரின் முன்னோடி நாடகக் கலைஞரும் கவிஞருமான நா.பழநிவேலு, படைப்பாளர்கள் சிங்கை முகிலன், பி.கிருஷ்ணன், சிங்கை மா. இளங்கண்ணன், இராம. கண்ணபிரான், ஜே.எம்.சாலி, க.து.மு.இக்பால், கலைஞர்கள் மாதவி கிருஷணன், ச.வரதன், நீலா சத்தியலிங்கம், சாந்தா பாஸ்கர் ஆகியோர் இந்நாட்டில் தமிழ்க் கலை, இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்காக கலாசார பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்கள்.
இவ்விருது சிங்கப்பூரின் அன்றைய கலாச்சார அமைச்சர், அமரர் ஓங் டெங் சியோங்கால் 1979ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
தேசிய கலைகள் மன்றம் நிர் வகிக்கும் கலாசாரப் பதக்கத்தை அதிபர் வழங்கி வருகிறார்.
இந்தப் பதக்கம் பெறுவோர் மேலும் படைப்புகளை உருவாக்க $80,000வரை நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.
தி ஆர்ட்ஸ் ஹவுசில் நடை பெறும் கண்காட்சியை இன்று முதல் பொதுமக்கள் காணலாம். அனுமதி இலவசம். மேல் விவரங் களுக்கு: https://ourCMstory.sg