400க்கும் அதிகமான இந்து ஆலயங்களை மீண்டும் திறந்துவிட பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களை மீண்டும் திறந்துவிட அந்நாட்டின் மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. கட்டடங்கட்டமாக அந்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் இந்துக்களுக்கே திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கல்ஃப் நியூஸ் செய்தித்தளம் இன்று தெரிவித்தது.

இந்தியாவும் பாகிஸ்தானுவும் பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் இருந்த இந்துக்களில் பெரும்பாலானோர் அந்நாட்டைவிட்டுச் சென்றனர். ஆயினும் பல கோயில்கள் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டன. ஆலயங்கள் பல பொது இடமாகவும் ஒருசில இஸ்லாமிய சமயப் படசாலைகளாகவும் மாற்றப்பட்டன. ஆயினும் இப்போது பாகிஸ்தானிய அரசாங்கம் கோவில்களைப் புனரமைத்து அவற்றை இந்து சமூகத்திற்கே திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

சியால்கோட், பெஷாவர் ஆகிய இடங்களிலுள்ள இரண்டு புராதன ஆலயங்களின் புனரமைப்பில் இந்நடவடிக்கை தொடங்கும். சியால்கோட்டிலுள்ள ஜகந்நாதர் ஆலயம் பாகிஸ்தானில் இன்னமும் பயன்படுத்தப்படும் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்று. மற்றொரு ஆலயமான சிவால தேஜா சிங்கை பாகிஸ்தானிய அரசாங்கம் புனரமைக்கப்போவதாகக் கூறப்படுகிறது. 1992ல் பாப்ர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து அந்த 1,000 ஆண்டு பழமையான சிவன் கோயிலில் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்துக்கள் அந்த ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்தியிருந்தனர்.

பெஷாவரில் பாகிஸ்தானிய நீதிமன்றங்கள் கோரக்நாத் கோயிலை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது. அந்தக் கோயிலை மரபுடைமை நிலையமாகவும் அறிவிக்க அந்நாடு முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களை மறுசீரமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. புராதன கோயில்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கும் வரலாற்றுப் பிரியர்களுக்கும் இது நற்செய்தியாக அமைந்துள்ளது.