வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் 10 நகரங்களில் வாக்களிக்கலாம்

வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூரர்கள், வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் 10 நகரங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம். 

கடந்த 2015ஆம் ஆண்டின் அதே 10 நகரங்களான பெய்ஜிங், கேன்பெரா, ஹாங்காங், லண்டன், நியூயார்க், சான் ஃபிரான்சிஸ்கோ, ‌‌ஷங்காய், தோக்கியோ, வா‌ஷிங்டன் ஆகியவை அவை.

இம்முறை கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள அதிகாரிகளின் அனுமதிக்கு ஏற்ப வெளிநாடுகளில் வாக்களிப்பு நடைபெறும்.

மேலும், சிங்கப்பூருக்குத் திரும்பி 14 நாட்கள் வீட்டிலேயே இருக்கவேண்டிய உத்தரவின்கீழ் உள்ள சிங்கப்பூரர்களும் வாக்களிக்க ஏதுவாக சிங்கப்பூர் தேர்தல் துறை அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வீட்டிலேயே தங்கும் உத்தரவில் உள்ளோர் மற்ற வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் அதிக தொடர்பு இல்லாமல் பார்த்துக்கொள்வதற்காக அவர்கள் ஹோட்டல்களுக்குச் சென்று வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு இதுகுறித்த மேல் விவரங்கள் வெளியிடப்படும். வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களுக்கு வாக்களிக்கும் விதிமுறைகள் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் நன்கு கலந்தாலோசித்த பிறகே தேர்தல் அதிகாரி டான் மெங் ஹுயி இந்த முடிவுக்கு வந்ததாக, தேர்தல் துறை இன்று (ஜூன் 29) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.