‘மூத்த குடியிருப்பாளர்களிடம் பிரசார செய்திகளைக் கொண்டுசேர்ப்பது முக்கியம்’

கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக பொதுத் தேர்தல் பிரசாரங்கள் இணையம் மூலம் நடைபெற்று வரும் வேளையில், தொழில்நுட்ப ஆற்றல் குறைந்த மூத்த குடியிருப்பாளர்களிடம் பிரசார செய்திகளைக் கொண்டு சேர்ப்பதற்கான தேவை இருப்பதாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி வேட்பாளர் டைலன் இங் கூறியுள்ளார்.

நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள உணவங்காடி நிலையம் ஒன்றுக்கு இன்று (ஜூஐ 4) தொகுதி உலா சென்ற அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளரிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) தலைமையகத்திற்கு அருகே அந்த உணவங்காடி நிலையம் அமைந்துள்ளது. மசெக மற்றும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் நேற்றுக் காலை அந்த உணவங்காடி நிலையத்திற்குச் சென்று குடியிருப்பாளர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

மூத்த குடியிருப்பாளர்களிடம் பிரசார செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் குறுக்குவழி எதுவும் கிடையாது என்று திரு இங் சொன்னார்.

“சில மூத்த குடியிருப்பாளர்களிடம் நாங்கள் ஆங்கிலத்தில் பேசினால் அவர்களுக்குப் புரியாது. எனவே, அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் நாம் பேச வேண்டும்,” என்றார் அவர்.

திரு இங்குடன் சேர்ந்து ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் போட்டியிடும் சக வேட்பாளர்களான திரு கென்னத் ஃபூ, திருமதி நிக்கல் சியா ஆகியோரும் தொகுதி உலாவில் கலந்துகொண்டனர்.