வேலைகளை உருவாக்குவது கடினம்: பிரித்தம் சிங்

பாட்டாளிக்கட்சி நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வாகப் பங்காற்றும் என்றும் மக்கள் செயல் கட்சியைத் தனது கட்சி தொடர்ந்து தூண்டிக் கொண்டிருக்காது என்றும் அக்கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் தெரிவித்திருக்கிறார். வேலைகள் உருவாக்கும் கடுமையான சவால் அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

கொரோனா கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு வேலைகள் இன்னும் முக்கியமானது என்று அவர் இன்று (ஜூலை 4) மரின் டெரேஸ் சந்தைக்குத் தொகுதி உலா சென்றபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இதன் தொடர்பாக மக்கள் செயல் கட்சியினருக்கு கடிமான பணி இருப்பதால் இது குறித்து விவாதிப்பதைவிட நாம் பிரதிநிதிக்கும் மக்களின் குரல்களை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவருவதே எதிர்க்கட்சிகளாகிய எங்களது கடமை," என்று அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மூன்று பெரிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அரசாங்கத்தை உருவாக்கலாம் என்று மக்கள் செயல் கட்சி கூறி வருவதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய நிலை ஏற்படுவது நம்பக்கூடியது அல்ல என்று அவர் கூறினார்.

 சிங்கப்பூரின் சுதந்திரம் அடைந்து 16 ஆண்டுகளுக்குப்  பிறகுதான்  நாடாளுமன்ற இடம் ஒன்றை வெல்ல எதிர்க்கட்சியால் முடிந்தது என்றும் குழுத்தொகுதி முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 23 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எதிர்க்கட்சி ஒரு குழுத்தொகுதியை வெல்ல முடிந்தது என்றும் திரு சிங் சுட்டினார்.

"திரு சான் கூறுவது நம்பகத்தனமானதா என்பதை ஆராய இந்த வரலாற்றுத் தகவல் உதவும் என நம்புகிறேன். அவர் கூறுவது நம்பகத்தனமானது அல்ல," என்றார் அவர்.