புதிய உச்சம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு $5.38 பில்லியன் பற்றாக்குறை

கடந்த 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி 2023 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டின் முடிவில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் பற்றாக்குறை $5.38 பில்லியன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.

புதிய வீடுகள் கட்டுமானம், கட்டி பல ஆண்டுகளாகிவிட்ட வீடுகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை அதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

முந்திய நிதியாண்டில் கழகத்தின் பற்றாக்குறை $4.367 பில்லியனாக இருந்த நிலையில், 2022 நிதியாண்டில் அது 23 விழுக்காடு கூடிவிட்டது.

கட்டப்பட்டுவரும் வீடுகளால் எதிர்பார்க்கப்படும் இழப்பு, மத்திய சேம நிதி வீடமைப்பு மானிய வழங்கீடுகள், வீட்டு உரிமைத் திட்டத்தின்மூலம் மானிய விலை வீட்டு விற்பனை மூலம் ஏற்பட்ட மொத்த இழப்பு ஆகியவையே $4.68 பில்லியன் பற்றாக்குறைக்குக் காரணங்கள் என்று வீவக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தனது வருடாந்தர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிலையற்ற விநியோகச் சங்கிலி, கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம், ஊழியர் பற்றாக்குறை ஆகியவற்றால் கடந்த 2019 நிதியாண்டிலிருந்து கட்டுமானச் செலவுகள் 40% கூடிவிட்டதாக வீவக தலைமை நிர்வாகி டான் மெங் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்து வருவதாக வீவக கூறியது.

தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான (பிடிஓ) கட்டுமானச் செலவுகள் மற்றும் அதற்கு வழங்கப்படும் மானியங்களைக் காட்டிலும் குறைவான தொகையே வீட்டு விற்பனை மூலம் தனக்குக் கிடைப்பதாக வீவக குறிப்பிட்டது.

வீட்டு விற்பனை மூலம் வீவகவிற்கு ஏற்பட்ட இழப்பு ஓராண்டிற்குமுன் $659 மில்லியனாக இருந்த நிலையில், 2022 நிதியாண்டு முடிவில் அது $1.2 பில்லியனாக உயர்ந்தது.

புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம்.

முந்திய 2021 நிதியாண்டில் 13,506 வீடுகள் விற்பனையான நிலையில், 2022 நிதியாண்டில் அதைவிட 36.8 விழுக்காடு கூடுதலாக, அதாவது 18,478 வீடுகள் விற்கப்பட்டன. இந்த எண்ணிக்கையானது, ஸ்டுடியோ வீடுகளையும் குறுகிய குத்தகைக்கால வீடுகளையும் உள்ளடக்கவில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த விற்பனையில் இதுவே ஆக அதிகம் என்றார் திரு டான்.

இதனிடையே, முந்திய 2021 நிதியாண்டில் வீவக மறுவிற்பனை வீடுகளையும் கூட்டுரிமை வீடுகளையும் வாங்கியோருக்கு $849 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது. இத்தொகை 2022 நிதியாண்டில் $686 மில்லியனாகக் குறைந்தது.

முந்திய ஆண்டில் 30,400 வீடுகள் மறுவிற்பனையான நிலையில், சென்ற ஆண்டு அது 27,900ஆகக் குறைந்ததே இதற்குப் பெரிதும் காரணம் எனச் சொல்லப்பட்டது.

மேலும், வாடகை வீடுகளில் பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வீவக கிட்டத்தட்ட $141 மில்லியன் செலவிட்டது.

அதேபோல, மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 2021 நிதியாண்டில் $392 மில்லியன் செலவிடப்பட்ட நிலையில், 2022ல் அச்செலவு $558 மில்லியனாக உயர்ந்தது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் வேகமெடுத்ததே இதற்குக் காரணம் என்று வீவக தெரிவித்தது.

கடந்த 2022 நிதியாண்டில், இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 33,704 வீடுகள் மேம்படுத்தப்பட்டன.

அத்துடன், பொது வீடமைப்புப் பேட்டைகளில் மின்சார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, குத்தகை நிர்வாக, கார் பேட்டை நிர்வாகம் உள்ளிட்ட பணிகளுக்காக $432 மில்லியன் செலவிடப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் வீவகவிற்குப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனை ஈடுகட்ட நிதியமைச்சிடமிருந்து அதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

அண்மைய நிதியாண்டில் அதற்கு $5.389 பில்லியனும் அதற்கு முந்திய ஆண்டில் $4.4 பில்லியனும் மானியமாக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, வீவக வீடுகள் கட்டுப்படியான விலையிலும் எளிதில் கிடைக்கும் வகையிலும் இருப்பதற்காக, 2022 நிதியாண்டில் அதற்கான செலவினங்களை அரசாங்கம் அதிகப்படுத்தியது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!