பொஃப்மா திருத்த உத்தரவு: ‘எஸ்பிஎச் மேகஸின்ஸ்’ நிறைவேற்றியது

ஹார்ட்வேர்ஸோன் கருத்தரங்குத் தளத்தை நிர்வகிக்கும் எஸ்பிஎச் மேகஸின்ஸ், ‘பொஃப்மா’ எனப்படும் பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட அலுவலகம் விடுத்த திருத்த உத்தரவை நிறைவேற்றியுள்ளது.

வூஹான் கிருமியால் சிங்கப்பூரில் ஒருவர் மாண்டுவிட்டார் என்று பொய்யான செய்தியைத் தனது தளத்தில் பதிவிட்ட ஹார்ட்வேர்ஸோன் தளத்துக்கு எதிராக நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கின் உத்தரவின் பேரில் பொஃப்மா அலுவலகம் திருத்த உத்தரவு பிறப்பித்தது. 

அந்தக் கருத்தரங்கில் பொய்ச்செய்தி பதிவு நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு இடம்பெற்றது. அந்தப் பதிவு இப்போது அகற்றப்பட்டு விட்டது. 

“ஹார்ட்வேர்ஸோன்.காம் சமூக விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது பதிவை அகற்றி விட்டது. அது பொஃப்மா உத்தரவின்படி திருத்தக் குறிப்பையும் அச்சிட்டது. கருத்த ரங்கைப் பயன்படுத்துவோர் உண்மையான தகவலைப் பதிவிடுமாறு நினைவூட்டப்பட்டுள்ளனர்.” என்று எஸ்பிஎச் மேகஸின்சின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.