சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மேலும் மெதுவடையலாம்

சிங்கப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டில் 3.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததாக வர்த்தகத் தொழில் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இது, 2017ஆம் ஆண்டின் 3.9 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும் குறைவு.  இந்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி விகிதம் 1.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்ற முன்னுரைப்பை வர்த்தகத் தொழில் அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. தன்னைப்பேணித்தனக் கொள்கைகளால் உலகில் தற்போது நிலவி வரும் வர்த்தகப் பதற்றநிலை பொருளியல் வளர்ச்சியின் மெதுவடைவுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட மந்தமாக இருக்கும் சீனாவின் தற்போதைய பொருளியல் நிலவரமும் ஒப்பந்தமில்லாத ‘பிரெக்சிட்’ ஏற்படும் சாத்தியமும் இந்த மெதுவடைவுக்குப் பங்களித்திருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

2018ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டு அடிப்படையில் 1.9 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. இது, மூன்றாம் காலாண்டின் 2.4 விழுக்காட்டைவிடவும் அமைச்சின் முன்னோட்டக் கணிப்பான 2.2 விழுக்காட்டைவிடவும் குறைவு.  2018ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் உற்பத்தித்துறை ஆண்டு அடிப்படையில் 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கு முந்திய காலாண்டில் இந்த விகிதம் 3.5 ஆக இருந்தது. காலாண்டு அடிப்படையில் இந்தத் துறை 2.7 விழுக்காடு சுருக்கம் கண்டுள்ளது.

கட்டுமானத் துறை தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. 2018ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்தத் துறை ஆண்டு அடிப்படையில் 1.0 விழுக்காடு குறைந்துள்ளது. இதற்கு முந்திய காலாண்டில் இந்த விகிதம் 2.3 ஆக இருந்தது. இந்த நலிவுக்குப் பொதுக் கட்டுமானத்துறை முக்கிய காரணம் என்று அமைச்சு கூறியது. சில்லறை விற்பனை துறையும் ஆண்டு அடிப்படையில் 0.6 விழுக்காடு குறைந்திருக்கிறது.