சிங்கப்பூர்: தண்ணீர் ஒப்பந்த நிபந்தனைகளை அனைத்துத் தரப்பினரும் மதிக்கவேண்டும்

தண்ணீர் ஒப்பந்தத்தில் உடன்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மதித்து நடக்கவேண்டும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது.

தற்போது, சிங்கப்பூருக்குச் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை ஜோகூர் வழங்குகிறது. சிங்கப்பூர் அதனைச் சுத்திகரிப்பு முறையால் தூய்மைப்படுத்தி, அந்தத் தண்ணீரில் ஒரு பகுதியை ஜோகூருக்குத் திருப்பி அனுப்புகிறது.

ஜோகூர் மாநில அரசாங்கம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைச் சொந்தமாக உற்பத்தி செய்யும் ஆற்றலை வளர்க்க முற்படுவதை சிங்கப்பூர் அறிவதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“ஆயினும், ஜோகூர் உட்பட அனைத்துத் தரப்பினரும் 1962 தண்ணீர் ஒப்பந்தத்தை மதித்து நடக்கவேண்டும் என்ற சிங்கப்பூரின் நிலைப்பாட்டை இது மாற்றாது. ஒப்பந்தத்தை எந்த ஒரு தரப்பினரும் தன்னிச்சையாக மாற்ற முடியாது,” என்று அமைச்சு கூறியது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்காக சிங்கப்பூரை நம்பியிருப்பதற்குப் பதிலாக, தன்னையே சார்ந்திருக்க ஜோகூர் திட்டமிடுவதாக மாநில முதலமைச்சர் ஒஸ்மான் செப்பியான் கூறியதற்கு வெளியுறவு அமைச்சு பதில் அறிக்கை வெளியிட்டது.