‘சிங்கப்பூரும் மலேசியாவும் நல்லுறவு பாலங்களை வளர்க்கவேண்டும்’

அரசியல் நல்லுறவு, நன்மதிப்பு போன்ற பாலங்களை சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களுக்கிடையே அமைக்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சொக் டோங் தெரிவித்திருக்கிறார். 

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான போக்குவரத்தைச் சீர்ப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே கூடுதலான பாலங்கள் அமைக்கப்படவேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியது குறித்து திரு கோ தமது ஃபேஸ்புக் பதிவில் கருத்துரைத்தார். 

“கூடுதலான பாலங்களை அமைக்க மகாதீர் விரும்புகிறார். இதன் குறை நிறைகள் ஆராயப்படவேண்டும். அதுவரை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரு தேச மக்களுக்கும் இடையே அரசியல் நல்லுறவு, நன்மதிப்பு போன்ற பாலங்களைக் கட்டலாமே,” என்று திரு கோ கூறினர்.

“மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நெருக்கமான, வலுவான இணைப்புகளை நான் விரும்புகிறேன். நிதர்சனமான இணைப்புகளையும் அரசியல் இணைப்புகளையும் விரும்புகிறேன். நாங்கள் அண்டை நாடுகள், என்றைக்கும் அண்டை நாடுகளாகவே இருப்போம்,” என்றும் அவர் தமது பதிவில் சொன்னார்.