பணிப்பெண்கள் நீடித்திட முதலாளிகளுக்கு உதவி

வேலை செய்வதற்கான ஈராண்டு காலம் முடிவதற்கு முன்னரே மூன்றில் இரு பணிப்பெண் களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இங்குள்ள முதலாளிகளுக்கு இது ஒரு பிரச்சினையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. 

ஒப்பந்தக் காலம் முடிவதற்கு முன்பே ரத்து செய்யும் முதலாளிகளின்  எண்ணிக்கையைக் குறைப்பதற்காக மனிதவள அமைச்சு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இனி ஒவ்வொரு பணிப்பெண்ணின் முன்னாள் வேலை அனுபவம், முக்கிய வேலைப் பொறுப்புகள் போன்றவற்றின் தொடர்பில் அமைச்சு தகவல் சேகரித்திடும்.

இதன் அடிப்படையில் பணிப்பெண்கள் பொருத்தமான முதலாளிகளுக்கு அனுப்பப்படுவர். 

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தால் முதலாளிகளின் தேவைக்கேற்ப பணிப்பெண்கள் அமர்த்தப்படுவர்.

சென்ற ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 250 முதலாளிகள் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட பணிப்பெண்களை மாற்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிலையம், சமூக ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணியாளர் சங்கம் ஆகிய இரு அமைப்புகளும் பணிப்பெண் தொடர்பான சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் இலவச சேவையை இம்மாத இறுதியிலிருந்து வழங்க உள்ளது.

முதலாளிகள், இல்லப் பணியாளர்கள், பணிப்பெண் முகவர்கள் ஆகியோருக்கு இடையே ஏற்படும் புரிந்துணர்வின்மையை இதன்வழி சுமுகமாகப் போக்கிவிடலாம் என்று நம்பப்படுகிறது.

Loading...
Load next