நீரிழிவு நோயாளிகளைக் கையாள்வதில் புதிய முறை

மருந்தக நடைமுறைகளில் நீரிழிவு நோயாளிகளை ஈடுபடுத்துவது அவர்களின் வாழ்க்கைமுறையை மாற்ற உதவும் என்று தேசிய பல்கலைக்கழக சுகாதாரப் பிரிவின் ஆய்வு தெரிவிக்கிறது. தனியார் மருத்துவர்கள் நேற்று பங்கேற்ற கருத்தரங்கு ஒன்றில் ஆய்வு முடிவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. 

இந்தக் கருத்தரங்கிற்கு தேசிய பல்கலைக்கழக சுகாதாரப் பிரிவும் சிங்கப்பூர் நீரிழிவு விழிப்புணர்வு அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இனிப்பு உட்கொள்ளுவதைக் குறைத்துக்கொள்ளுமாறு ஆலோசனை கூறலாம்.  ஆயினும் அவர்களின் போக்கிலிருந்து மாற்றி கட்டுப்படுத்தவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்ற கருத்து வெளிப்பட்டுள்ளது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி மருத்துவரான இயூ டோங் வெய் இதுபற்றி கூறும்போது மலாய் முஸ்லிம் பெண்ணான தமது நோயாளி ஒருவர் இனிப்பு வகைகள் நிறைந்த விருந்துகளை தமது நண்பர்களுடன் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். 

“காய் அல்லது பழக்கூட்டுகளில் மலாய்க்காரர்களின் வழக்கமான சுவையூட்டிகளைக் காட்டிலும் ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தச் சொல்லலாம் என்பது நான் பரிந்துரைக்கும் தீர்வு. ஆனால் அதுதான் தீர்வு என்பதல்ல. தொன்றுதொட்டு அவர் கடைப்பிடித்து வரும் பழக்கவழக்கத்தோடு அது உடன்படாது,” என்றார் டாக்டர் இயூ.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னோடித் திட்டத்தில் பங்கேற்று இருக்கும் ஒன்பது மருத்துவர்களில் இவரும் ஒருவர்.  மருந்தக நடைமுறைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் நீழிரிவு நோயாளிகளை புதிய விதத்தில் அணுகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அந்தத் திட்டத்தின் நோக்கம்.

மருத்துவரைச் சந்திக்கக் குறிக்கப்பட்டு இருக்கும் நாளுக்கு முன்னரே எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலான பல்வேறு சோதனை முடிவுகளை நோயாளிகள் பெறுவர்.

இவ்வாறு செய்வது எந்தெந்த வகையில் நோயாளிகள் அதிக மற்றும் குறைவான இடர்ப்பாடுகளில் உள்ளனர் என்பதை கண்டறிய உதவும்.  உதாரணமாக சிறுநீரகச் செயல்பாடு, ரத்தக் கொழுப்பின் அளவு போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து உணவு உட்கொள்ளும் பழக்கம் உள்ளிட்ட நோயாளிகளின் வாழ்க்கைப்பாணியை மாற்ற ஏதுவாக இருக்கும்.

ஓராண்டாக செயல்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தின் பயனாக நோயாளிகளின் உடல்நிலையில் பொதுவான முன்னேற்றம் காணப்பட்டது.  உதாரணமாக, குளுகோஸைக் கட்டுப்படுத்தும் விகிதாசாரம் இதற்கு முந்திய திட்டத்தைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானது.

நோயாளிகள் தங்களது உடல் நலச் சோதனை முடிவுகளை மருத்துவருடனான சந்திப்புக்கு முன்னரே படித்துத் தெரிந்துகொள்ள முடிவதால் அவர்களின் பழக்க வழக்கங்களையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்தச் சொல்வது எளிதாக உள்ளது என்று டாக்டர் இயூ தெரிவித்தார்.