‘அமைச்சின் வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம்; மஞ்சள் மகிமை என்பது வேறு’

இந்திய உணவுவகைகளில் மருத்துவ குணங்கள் கொண்ட தாளிப்புப் பொருட்கள் இருப்பதால் வூஹான் கிருமி தங்களைப் பெரும்பாலும் பாதிக்காது என்ற மனப்பான்மை சிலரிடையே உள்ளது.

ஆனால் இது தவறான கருத்து  என்றும் இந்திய உணவு, குறிப்பாக மஞ்சள் தூள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதால் இக்கிருமிக்கு எதிராகப் பாதுகாப்பு கிடைக்காது என்றும் தெரிவித்தார் குடும்ப நல மருத்துவரான டாக்டர் பாஸ்கரன் சுரேந்திரன்.

‘‘வூஹான் கொரோனா கிருமி காற்றில் பரவும் தன்மை கொண்டது. மஞ்சள் போன்ற தாளிப்புப் பொருட்கள் இந்திய உணவுவகைகளில் அதிகம் இடம்பெற்றாலும் வூஹான் கொரோனா கிருமியிடமிருந்து பாதுகாப்பு இல்லை. சுகாதார அமைச்சின் முன்னெச்சரிக்கை தகவல்களைப் பின்பற்றுவது முக்கியம்,’’ என்றார் டாக்டர் பாஸ்கரன்.  

மஞ்சள் தூளுக்கு நோய் எதிர்ப்புத் தன்மைகள் உள்ளது என்றாலும் எந்த அளவுக்கு அது வூஹான் கிருமியை எதிர்கொள்ளும் என்று அறிவியல்ரீதியாக உறுதிப்படுத்த முடியாது என்று குழந்தை நல மருத்துவர் டாக்டர் கே. வெள்ளையப்பன் தெரிவித்தார்.

எனினும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள சரியான உணவை உட்கொள்ளுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இங்கு வூஹான் கிருமி தொற்றியதிலிருந்து நிலைமை கட்டுக்குள் வைத்திருக்க சிங்கப்பூரின் சுகாதார அமைப்புகள் விழிப்பு நிலையில் உள்ளன. இதற்கிடையே வூஹான் கொரோனா கிருமி பற்றி இந்திய சமூகத்தினரிடையே நிலவும் கருத்துகளை தமிழ் முரசு செய்திக்குழு கண்டறிந்தது.

பெரும்பான்மை இந்தியர்கள் தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தனர். சிலர் உணவில் மஞ்சள் தூள் அதிகமாகச் சேர்க்க இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

“நோய்ப்பரவல் குறித்து இந்தியர்கள் அவ்வளவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதை நான் கண்டதில்லை. பொது இடங்களில் முகக் கவசங்கள் அணிவோரில் பெரும்பாலானோர் சீனர் களாக உள்ளனர். புதிய நோய்ப்பரவலால் அவ்வளவாக எனக்குப் பயமில்லை என்றுதான் சொல்லவேண்டும். என் பழக்க வழக்கங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை,” என்றார் வர்த்தகரான திரு மணி, 55.

தம்முடைய இரு பிள்ளைகள் பூங்காவின் விளையாட்டு மைதானத்தில் செலவழிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார் சொத்து முகவரான 54 வயது திரு சுப்ரமணியம் சண்முகம். மேலும் கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“சாப்பிடும் உணவு குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பேன். கடையில் வாங்கும் உணவைத் தவிர்க்க முயற்சி செய்வேன். அங்காடியிலிருந்து வாங்கும் பொருட்களை நன்றாகக் கழுவுவேன். குறிப்பாக இறைச்சி வகை களுக்கு மஞ்சள் பயன்படுத்துவேன்,” என்று கூறினார் குழந்தைப் பராமரிப்பு நிலைய ஆசிரியரான திருமதி எஸ். புனிதவதி, 48.

நிலைமை மேம்படும் வரை சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளப்போவதில்லை என்றார் திரு சத்யன், 32. இவர் ஓர் அலுவலக நிர்வாகி.

2003ஆம் ஆண்டில் ‘சார்ஸ்’ கிருமி சிங்கப்பூரைப் பாதித்தபோது, 23 வயது சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழக மாணவியான ல.ஜெயநந்தினிக்கு ஆறு வயதுதான். அப்போது கிருமியின் பாதிப்பைப் புரிந்துகொள்ளும் பக்குவம் அவருக்கு இல்லை.

ஆனால் தற்போது வூஹான் கொரோனா கிருமி தொற்றியதில் இருந்து தமக்குச் சிறு பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஜெயநந்தினி, அனைவரும் தமது தனிப்பட்ட சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால் இதிலிருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்.

அரசாங்கம் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி இதுபோன்ற தொற்று நோய்களை அண்டவிடாமல் செய்வது இந்த நேரத்தில் முக்கியமான ஒன்று என்று கருதுகிறார் 24 வயது வர்த்தகர் அர்வின்.  

வூஹான் கொரோனா கிருமி தொற்று குறித்து தமிழ் அமைப்புகளும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவி வருகின்றன. இக்கிருமி தொற்றுவதைத் தடுக்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதை விளக்கும் சுவரொட்டியை தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

‘‘வரும் நீண்ட விடுமுறை காலத்தில் லிஷா (LISHA) அமைப்புடன் தமிழர் பேரவை இணைந்து லிட்டில் இந்தியா பகுதியில் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகிக்கும். அதோடு, இது குறித்த சுவரொட்டிகள் பெரும்பாலான லிட்டில் இந்தியா கடைகளிலும் ஒட்டப்பட்டிருக்கும்,’’ எனக் கூறினார் தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ.பாண்டியன்.