(காணொளி): வண்ணப் பட்டுச் சேலை, வளையல் கொஞ்சும் கைகள்... நண்பர்கள் புடைசூழ பைக் ஓட்டிச் சென்ற மணப்பெண்

வண்ணப் பட்டுச் செல்லை உடுத்தி, கைகளில் வளையல் கொஞ்ச தன்னுடைய திருமணத்திற்குத் தயாரான தெரெசா, தன்னுடைய திருமணத்தில் தனக்குப் பிடித்த ‘பைக் ஓட்டுதலும்’ இடம்பெற வேண்டும் என்று நினைத்தார்.

விளைவு?

தன்னுடைய Babes on Wheels குழுவைச் சேர்ந்த 8 பெண் பைக் ஓட்டுநர்களுடன் சேர்ந்து புவாங்காக் லிங்கில் இருந்து பொத்தோங் பாசிரில் உள்ள ஸ்ரீ சிவ துர்கா ஆலயம் வரை தனது சகோதரரின் Kawasaki H2 பைக்கில் சென்றார். அதைக் காட்டும் காணொளி ஒன்று ஸ்டோம்ப் செய்தி இணையப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. 

அவர் மணக்கோலத்தில் இருந்தது மட்டுமல்ல, அவரது குழுவைச் சேர்ந்த பெண்களும் தங்க நிறத்தில் சேலையணிந்து பைக் ஓட்டிச் சென்றது சாலையில் சென்றோரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த 9 பேருடன்  Team Intruderz, Metal Horseman, Team Black Stallion போன்ற குழுக்களையும் சேர்ந்த பலரும் அந்த ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். கிட்டத்தட்ட 25 பைக்குகள் ஒரே நேரத்தில் சென்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

தனது குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரே மாதிரி புடவை, சட்டை போன்றவற்றைத் தயார்ப்படுத்த கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பிடித்தது என்றார் ஸ்டோம்ப் வாசகரான தெரெசா. புடவைகளை கால்சட்டைபோல தைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதையும் விளக்கினார் அவர்.

18 வயதிலிருந்தே பைக் ஓட்டுவதாகக் குறிப்பிட்ட தெரெசா, தனது திருமண நாளிலும் ‘தாம் தாமாகவே இருக்க’ விரும்பினாராம்.

சுமார் 20 ஆண்டுகளாக பைக் ஓட்டி வரும் அவர், தற்போது Yamaha Tracer MT-09, KTM 1190 Adventure, Yamaha Aerox ஆகிய வண்டிகளை வைத்திருக்கிறாராம். 

தெரெசாவின் கணவருக்கு பைக் ஓட்டுவதில் அவ்வளவு ஆர்வம் இல்லாவிட்டாலும் பிப்ரவரி 22ஆம் தேதி, தமது திருமணத்துக்கு பைக்கில் வருவதற்கு அவர் ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்டார் அவர்.

திருமணத்துக்கு முன்பு கணவருடனான தனது முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த தெரெசா, கோலாலம்பூர் வரை தமது KTM 1190 Adventure வண்டியில் அவரை அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டார். அது அவருக்கு மிகவும் பிடித்துப்போனது என்று கூறியதுடன் தன்மீது மட்டுமின்றி தனது இருசக்கர வாகனங்களின் மீதும் அவருக்கு காதல் ஏற்பட்டது என்றார்.

திருமணத்துக்கு பைக்கில் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்துக்கு கணவர், தோழிகள் எனப் பலரும் ஆதரவாக இருந்ததைக் குறிப்பிட்ட திருமதி தெரெசா, “பெண்கள் தம் வாழ்வில் பல சவால்களைச் சந்திக்கின்றனர்; அதில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியது முக்கியம் எனக் கருதுகிறேன்,” என்றார்.

#தமிழ்முரசு