சிங்கப்பூர்-மலேசியா எல்லை கடக்கும் பயணத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே நீண்டகாலம் தங்க அனுமதியுடையோர், அத்தியாவசிய தொழில் மற்றும் அதிகாரபூர்வ பயணிகள் ஆகியோருக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்குகின்றன.

அத்தகைய பயணிகள் வருவதற்கு முன்பும் வரும்போதும் வந்ததற்குப் பிறகும் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும். 

பயணிகள் செல்லும் நாடு அவர்களின் பயணத்தை அங்கீகரித்து இருக்கிறது என்பதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். பயணிகள் இங்கு வரும்போது கொவிட்-19 சோதனைக்கு உட்பட வேண்டும். 

எந்தவொரு நாட்டிற்கும் 14 நாட்கள் வரை குறுகிய பயணம் மேற்கொள்வோர், தங்கியிருக்கும் காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பயணத் திட்டத்தைப் பின்பற்றுவது உள்ளிட்ட பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைக்கு ஏற்ப தொடர்புகொள்வதற்கான செயலியை அவர்கள் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். 

குறுகியகால வருகையில் வருவோர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியாது. இருந்தாலும் தனியார் வாடகைக்கார், டாக்சி, நிறுவன போக்குவரத்தை அவர்கள் பயன்படுத்தலாம். 

சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தின் இணையப் பக்கத்தில் இதன் தொடர்பிலான விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

இத்தகைய பயணிகள் சென்று வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் தொடர்பிலான பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்த இரு நாடுகளும் ஜூலை 14ஆம் தேதி உடன்பாடு கண்டன. அதனைத் தொடர்ந்து இப்போது விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 

இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை கடந்த பயணம் இரண்டு திட்டங்களின்கீழ் மீண்டும் தொடங்க இருக்கிறது.

குறுகியகால பயணங்களை மேற்கொள்வோருக்கான பரஸ்பர அனுமதி வழித்தடம் என்பது ஒரு முறை. நீண்டகாலப் போக்கில் காலக்கிரம முறைப்படி பயண ஏற்பாடுகளைச் செய்வது மற்றொரு முறை. இந்தத் திட்டங்கள் மாணவர்களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் இல்லை.