வெளிநாடுகளிலிருந்து திரும்பிய ஒரு வயது குழந்தை உட்பட ஐவருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் 1) உறுதி செய்யப்பட்ட 307 கொவிட்-19 சம்பவங்களில், ஐவர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற தகவலை சுகாதார அமைச்சு  தெரிவித்தது. 

அவர்கள் 1 முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள். இந்தியா, பிலிப்பீன்ஸ், சீனா ஆகிய நாடுகளிலிருந்து திரும்பியவர்கள்.

பிலிப்பீன்சிலிருந்து திரும்பிய 34 வயது பெண்ணுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்தன. மற்றவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதுமில்லை.

உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் 26 வயது சிங்கப்பூர் பெண்மணி. 

சுவாசப் பிரச்சினைகள் உள்ள 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட கிருமித்தொற்று பரிசோதனைகளில் இந்தப் பெண்ணுக்கு கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. 

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 3 ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 7 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 1 ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.