சுடச் சுடச் செய்திகள்

நாடகத்துறை எதிர்காலம் பற்றிய கலந்துரையாடல்

கொரோனா கிருமித்தொற்றால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டும் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டும் வரும் நிலையில் நாடகத் துறையும் விதிவிலக்கில்லை.

இணையத்திலேயே மூழ்கியுள்ள உலகில் நாடகத்துறையின் எதிர்காலம் என்ன என்பது குறித்து ‘நாடகவாதி 2 - நாடகமும் நாப்பழக்கம்’ என்ற மெய்நிகர் கலந்துரையாடல் நிகழ்ச்சி இம்மாதம் 5ஆம் தேதியன்று நடந்தேறியது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த நிகழ்ச்சி, இரண்டாம் முறையாக நடத்தப்பட்டது. ‘அகம் மேடைநாடக அமைப்பு’ ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அனுபவமிக்க நாடகக் கலைஞர்களான ரவி வேலு, ஐஸ்வரியா சண்முகநாதன், சுபின் சுப்பையா ஆகியோர் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.

“இந்திய நாடகத்துறை குறித்த தகவல்களையும் சிந்தனைகளையும் ஆவணப்படுத்துவது இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம். இந்த நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் ஏராளமான ஆவணங்களை நாம் உருவாக்கலாம். ஆய்வு செய்பவர்களுக்கு இவை பெரும் புதையலாக அமையும்,” என்றார் அகம் அமைப்பு நிறுவனரான சுப்பிரமணியன் கணேஷ், 36.

ஆவணங்கள், அச்சுப்பிரதி வடிவிலும் மின்னிலக்க வடிவிலும் உருவாக்கப்படும் என்றும் அவை தேசிய நூலக வாரியம், தேசிய கலைகள் மன்றம் ஆகியவற்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார் திரு கணேஷ்.

பேச்சாளர்கள் தலா 15 நிமிடங்கள் பேசிய பின்னர், உள்ளூர்க் கலைஞர் உதயசௌந்தரி வழிநடத்திய கலந்துரையாடல் அங்கத்தில் கலந்துகொண்டனர்.

‘சிங்கப்பூர் மேடைநாடகத்தில் பலவித இந்திய அடையாளங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றிய திரு சுபின் சுப்பையா, நாடகங்களில் சித்திரிக்கப்படும் இந்தியர்களின் சமூகத் தரத்தை உயர்த்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

“நாடகத்துறை உட்பட சிங்கப்பூர் படைப்புகளை உருவாக்குபவர்களின் வருத்தம் தரும் ஓர் அடிப்படைப் பிரச்சினை, இந்தியர்கள் ஒரே மாதிரியானவர்கள் என்ற சமூக மனப்பான்மை. காவல் அதிகாரி, செயல்திறன் குறைந்த வேலை செய்பவர், அதிலும் முக்கியமாக மதுபோதைக்கு ஆளானவர்களாகவும் வகைப்படுத்தப்படுகிறோம்,” என்றார் ‘ஹம்’ மேடைநாடக நிறுவனக் கலைஞர் திரு சுபின்.

தமது படைப்புகளின் மூலம் இந்தியர்களுக்குரிய தகுதிநிலையை உயர்த்தி வருவதாக சொன்ன சுபின், இந்த மாற்றத்தை மெல்ல நாடகக் கலைக்குள் புகுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

நாடகத்துறை வளர்ச்சிக்கான பாதையைப் பற்றி பேசியபோது மேலும் பல ரசிகர்களைப் படைப்புகள் சென்றடைவது முக்கியம் என்பதை வலியுறுத்தினார் சுபின்.

“மக்களின் நாட்டம் வெவ்வேறு ஊடகங்களின் பக்கம் செல்வதும் மற்றொரு பெரும் சவாலாக உள்ளது. அத்தகைய படைப்புகளின் தரமும் மேலோங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கிடைக்கும் அனுபவத்தை மேடைப் படைப்புடன் ஒப்பிட முடியாது. இருப்பினும் நாம் அந்த தரத்துக்கு இணையாகப் படைக்கவேண்டும். அதே அனுபவத்தைக் கொடுக்க நாம் முயற்சி செய்யவேண்டும், முக்கியமாக இளம் வயதினருக்காக,” என்றார் சுபின்.

நாடகத்தை வெறும் பொழுதுபோக்கு அங்கமாக பார்க்காமல், மனிதரை ஒருநிலைப்படுத்தக்கூடியதாகவும் ஆன்மிக சிந்தனைகளுக்கு எடுத்துச் செல்லும் கருவியாகவும் கருதவேண்டும் என்றார் கிட்டத்தட்ட 25 ஆண்டு காலமாக நாடகத் துறையில் தடம் பதித்து வரும் திரு ரவி.

“நாடகம் என்பதை ஒரு மனிதனை உன்னதநிலைக்கு எடுத்துச்செல்லக்கூடிய கருவியாகப் பார்க்கவேண்டும். இதுதான் நாடகத்தின் தனித்துவம். அதனால்தான் கலைகளிலேயே மிகப்பெரிய கலையாக மேடைநாடகத்தைக் கருதுகிறார்கள். முத்தமிழான இயல், இசை, நாடகம் எனக் கூறி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குப் பெரியதொரு கலா அம்சத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றால், அது ஆத்மாவை வளர்க்கக்கூடிய ஒரு கருவியாக இருக்கவேண்டும்,” என்று கூறினார் திரு ரவி.

‘கல்வியில் நாடகமும் மேடைநாடகமும்’ என்ற தலைப்பில் பேசினார் ஐஸ்வரியா சண்முகநாதன். நாடகம் என்பதை இணைப்பாட நடவடிக்கையாக மட்டும் கருதாமல் பள்ளிகளில் கற்பிக்கும் முக்கியப் பாடங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்தார் சிங்கப்பூர் நாடகக் கல்வியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான ஐஸ்வரியா.

“இணைப்பாட நடவடிக்கையாகவும் மேடை அனுபவமாகவும் மட்டுமில்லாமல் கல்வி அமைப்பில் நாடகக் கல்வி இடம்பெறவேண்டும். காரணம், நாடகத்துறை மதிப்பு வாய்ந்தது. சமூகத்தை உணர்வுபூர்வமாக அறிந்துகொள்ள நாடகம் மாணவர்களுக்கு உதவுகிறது. அத்துடன் 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள நாடகம் பங்காற்றுகிறது,” என்றார் ஐஸ்வரியா.

கலந்துரையாடலின் ஒரு பகுதியாக கேள்வி-பதில் அங்கமும் இடம்பெற்றது. பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட கேள்விகளுக்குப் பேச்சாளர்கள் பதிலளித்தார்கள். முழு நிகழ்ச்சி குறித்த விவரங்களுக்கு அகம் நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கத்தை நாடலாம். காணொளி இணைப்பு: https://youtu.be/lUnC-s2YgTc

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon