தெங்கா நகரத்தை தீவு விரைவுச்சாலையுடன் இணைக்க புதிய சாலைகள்

தீவின் மேற்குப் பகுதியில் புதிதாக உதயமாகும் தெங்கா வட்டாரத்தில் வசிக்கவிருப்பவர்களுக்குத் தீவு விரைவுச்சாலையுடன் நேரடி இணைப்பு கிடைக்கவுள்ளது. அந்த இணைப்பை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.

இந்த புதிய இணைப்புப் பணிகளில் ஜூரோங் வட்டாரவாசிகளை தீவு விரைவுச்சாலையுடன் இணைக்கும் புதிய மேம்பாலச்சாலையும் அடங்கும்.

இந்தக் கட்டுமானத் திட்டத்தில் புதிய சாலைகள் அமைக்கப்படுவதுடன் ஏற்கெனவே இருக்கும் சாலைகளை மாற்றியமைக்கும் பணிகளும் உண்டு.

தீவு விரைவுச்சாலை ஓரமாக, ஜூரோங் கெனல் டிரைவுக்குச் செல்லும் வழி அருகே அரை கிலோமீட்டர் நீளமுள்ள மேம்பால இருவழிச்சாலையும் இதில் இடம்பெறும். மேம்பாலச்சாலையின்கீழ் அமையவிருக்கும் ஒரு சாலைச் சந்திப்பு, தீவு விரைவுச்சாலை, ஜூரோங் கெனல் டிரைவ், தெங்கா நகரத்துக்குள் செல்லும் தெங்கா பொலிவார்ட் ஆகியவற்றை இணைக்கும்.

ஹொங் கா மேம்பாலச்சாலை, புக்கிட் பாத்தோக் மேம்பாலச்சாலை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தீவு விரைவுச்சாலையை விரிவாக்கும் பணிகளும் இடம்பெறும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் இப்பணிகளுக்கான ஏலக்குத்தகையை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

புதிய மேம்பாலச்சாலையையும் சாலைச் சந்திப்பையும் கட்ட ஏதுவாக தீவு விரைவுச்சாலையின் 1.5 கிலோமீட்டர் தூரமுள்ள பகுதி வடக்குத் திசையில் ஜூரோங் சாலையின் ஒரு பகுதிக்கு மாற்றப்படும். இதன் மூலம் ஜூரோங் சாலையின் போக்குவரத்து புக்கிட் பாத்தோக் சாலையுடன் இணையும் முன்பாகவே தீவு விரைவுச்சாலைக்குத் திசை திருப்பப்படும்.

ஓட்டுநர்களுக்கும் குடியிருப்பாளார்களுக்கும் அதிக இடையூறு ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றது ஆணையம்.

தெங்கா நகரம் சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த, தாக்குப்பிடிக்கும் தன்மை உடைய நகரமாக அமையவிருக்கிறது. பீஷான் நகரம் அளவுக்கு இருக்கப்போகும் தெங்கா நகரத்தில் நீர்வளங்களுக்கு அருகே இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்கள், சமூக வேளாண் வசதிகள் போன்றவை இருக்கும்.

இந்நகரத்தில் சிங்கப்பூரின் சாலைப் போக்குவரத்து இல்லா நகர மையமும் அமையவிருக்கிறது. பாதசாரிகளுக்கும் சைக்கிள் ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாத வண்ணம் சாலைகள் நிலத்துக்கு அடியே அமைக்கப்படும்.

கிட்டத்தட்ட 42,000 வீடுகளைக் கொண்ட தெங்கா, வன நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வட்டாரத்துக்கு ஜூரோங் வட்டார எம்ஆர்டி வழித்தடம் செயல்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!