பேரருள் பெறத் திரளும் பக்தப் பெருங்கடல்

தலை­முறை தலை­மு­றை­யாக சிங்­கப்­பூர் இந்­துக்­க­ளின் முக்­கிய வழி­பாட்­டுத் தல­மாக திகழ்ந்து வரு­கிறது சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில்.

1827ஆம் ஆண்­டில் நிறு­வப்­பட்ட இக்­கோ­யில் சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழை­மை­யான இந்­துக் கோயில். 13 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர், இக்­கோ­யி­லுக்கு இன்று குட­மு­ழுக்கு விழா நடை­பெ­று­கிறது.

காலப்­போக்­கில் இடம்­பெற்ற மாற்­றங்­கள், இக்­கோ­யி­லில் பல சிறப்பு அம்­சங்­க­ளைக் கொண்­டு­வந்­துள்­ளன.

கோயி­லின் ஐந்து அடுக்­குக் கோபு­ரம், திரௌ­பதி அம்­மன் சன்­னதி, கோவிலை இரு­பு­ற­மும் அலங்­க­ரிக்­கும் தூண்­கள் போன்­றவை நம்­மில் பெரும்­பா­லோர் சிறுவய­தி­லி­ருந்து பார்த்து இன்று­வரை ரசிக்­கும் சிறப்பு அம்­சங்­களா­கும்.

இம்­முறை கோயி­லி­லுள்ள சில சன்­ன­தி­கள் மாற்­றம் பெற்­றுள்­ளன. குறிப்­பாக, ஸ்ரீ மாரி­யம்­மன் கரு­வ­றை­யில் செய்­யப்­பட்ட மாற்­றம் பக்­தர்­க­ளுக்குக் கடந்த காலத்தை நினை­வு­ப­டுத்­தும்.

“ஸ்ரீ மாரி­யம்­மன் கரு­வ­றை­யில் இருந்த மின்­சார விளக்­கு­கள் அகற்­றப்­பட்­டு­விட்­டன. அவற்­றுக்­குப் பதி­லாக அகல் விளக்­கு­கள் ஏற்­றப்­பட்டு, அம்­ம­னின் திரு­வு­ரு­வம் அகல் விளக்கு வெளிச்­சத்­தில் ஒளி­ரும். இம்­மாற்­றம், தாயின் கரு­வ­றை­யில் இருப்­பது போன்ற உணர்­வைத் தரும். தமிழ்­நாட்­டில் உள்ள தொன்­மை­யான ஆல­யங்­களில் இப்­ப­ழக்­கம் பின்­பற்­றப்­ப­டு­கிறது,” என்று ஸ்ரீ மாரி­யம்­மன் கோயி­லின் தலை­வர் திரு எஸ். லட்­சு­ம­ணன் விவ­ரித்­தார்.

 

மறுசீர­மைப்­புப் பணிக்­குழு

 

இந்­தி­யா­வைச் சேர்ந்த தலை­மைச் சிற்­பக் கலை­ஞர் டாக்­டர் கே. தட்­சி­ணா­மூர்த்­தி­யின் வழி­காட்டு­த­லில் கடந்த ஓராண்டு கால­மாக புதுப்­பிப்­புப் பணி­கள் இடம்­பெற்று வந்­தன.

இவர் தமிழ்­நாட்­டின் இந்து சமய மற்­றும் அற­நி­லைக் கட்­டளை அமைப்­பின் ஆலோ­ச­கர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த 2010ஆம் ஆண்டு இக்­கோ­யி­லில் இடம்பெற்ற புதுப்­பிப்­புப் பணி­களை­யும் அவரே வழி­நடத்தினார்.

அவ­ரு­டைய தலை­மைத்­து­வத்­தின்­கீழ் 12 சிற்­பக் கலை­ஞர்­கள், ஏழு தச்சு, உலோக நிபு­ணர்­கள், ஓவி­யர்­கள் ஆகி­யோர் பணி­யாற்­றி­னர். இந்­தி­யா­வி­லி­ருந்து வர­வழைக்­கப்­பட்ட கலை­ஞர்­க­ளோடு உள்­ளூர் நிபு­ணர்­கள் பல­ரும் பணி­யாற்­றி­னர்.

இம்­முறை விரி­வான அள­வில் புதுப்­பிப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதற்­குத் தொழில்­நுட்­பம் பெரிதும் கைகொ­டுத்­தது.

“கோபு­ரம், விமா­னங்­க­ளின் நிலை­யைக் கண்­கா­ணிப்பதற்கு ஆளில்லா வானூர்தி பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

“பல ஆண்­டு­க­ளாக பழைய வண்­ணங்­க­ளின் மேலேயே வண்­ணம் பூசப்­பட்டு வந்­தது. இம்­முறை வண்­ணத்தை முழு­மை­யா­கச் சுரண்­டப்­பட்டு, பழு­து­பார்க்­கப்­பட்டு, அதன்­பி­றகு வண்ணம் பூசப்­பட்­டது,” என்று விளக்­கி­னார் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் கட்­டட, மறு­சீ­ர­மைப்­புக் குழு­வின் துணைத் தலை­வர் என்.ஆர். சங்­கர்.

 

தேசிய நினை­வுச் சின்­னம்

 

1973ஆம் ஆண்­டில் ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில் தேசிய நினை­வுச் சின்­ன­மாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. அதனால், கோயிலின் பழைமை மாறாமல் பாதுகாக்கப்படுவது முக்கியம்.

எனவே, தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் நினை­வுச் சின்­னப் பாது­காப்பு வாரி­யத்­தின் வழி­காட்­டு­தலின்­கீழ் மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் நடை­பெற்­றன.

“புதுப்­பிப்­புப் பணி­களை மேற்­கொள்­ளும்­போது இரண்டு முக்­கிய அம்­சங்­களை நாங்­கள் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டி­யி­ருந்­தது.

“முத­லா­வ­தாக, இக்­கோ­யில் தேசிய நினை­வுச் சின்­னம் என்­பதால் புது அம்­சங்­களை மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளின்­போது புகுத்தக்­கூ­டாது. புதுப்­பொ­லிவு கொடுக்க முடி­யுமே தவிர, புதிய சிலை­கள், வடி­வங்­கள் ஆகி­ய­வற்றை அமைக்க முடி­யாது என்­பது இரண்­டா­வது அம்­சம். இந்து சமய வழி­காட்­டு­த­லின்­படி கோயில் புதுப்­பிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது மற்­றொரு முக்­கி­ய­மான அம்­சம்,” என்­றார் திரு சங்­கர்.

 

தமிழ் இந்துக்களின் அடையாளம்

 

1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயி­லின் முதல் குட­மு­ழுக்கு நடை­பெற்­றது. அதன்­பின் 1949, 1971, 1984, 1996, 2010 ஆகிய ஆண்­டு­களில் குட­மு­ழுக்கு நடந்­தே­றி­யது. கொவிட்-19 கிரு­மிப் பர­வலால் சென்ற ஆண்டு இடம்­பெ­ற­வி­ருந்த குட­மு­ழுக்கு இந்த ­ஆண்­டிற்­குத் தள்­ளிப்­போ­டப்­பட்டது.

கிட்­டத்­தட்ட 200 ஆண்­டு­களாக சிங்­கப்­பூர்த் தமி­ழர்­க­ளின் சமய, சமூ­கத் தேவை­களை ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில் பூர்த்தி செய்­து­ வ­ரு­கிறது.

பல தலை­முறை­க­ளைச் சேர்ந்த இந்து பக்தர்­களின் நம்­பிக்­கை­கள் மற்றும் கலாசாரத்தின் முக்­கிய அடை­யா­ள­மாக ஸ்ரீ மாரி­யம்­மன் கோயில் வீற்­றி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!