மறைந்திருந்து பணம் பறிக்கும் கும்பல்

வங்கியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, தமது ஏடிஎம் அட்டையின் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்தார். தனது வங்கி அட்டை விவரங்களை அவர் வெளியிடாதபோது இவ்வாறு நடந்திருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

வங்கி அக்கட்டணத்தை ரத்து செய்தது. $153 திரும்பக் கிடைத்தது. இந்தச் சம்பவத்தில் பெரும் தொகை ஏமாற்றப்பட்ட சாத்தியம் உள்ளது.

“வங்கிக் கணக்கில் இருந்த தொகையை சரிபார்த்ததால் மோசடி நடந்ததை உடனே கண்டுபிடித்தேன். அதனால் என்னால் அந்தக் கட்டணத்தைத் தக்க நேரத்தில் ரத்து செய்ய முடிந்தது,” என்றார் ஆசிரியராகப் பணிபுரியும் திரு சரவணன்.

இணையம் வழியாகக் கட்டணம் செலுத்த இன்று பலவழிகள் உள்ளன. கைபேசி கேமரா மூலமாகவும் க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்தும் கட்டணம் செலுத்தலாம். வசதிகள் அதிகரித்துள்ள அதேநேரத்தில் மோசடி ஆபத்துகளும் பெருகியுள்ளன.

பலதரப்பட்ட மோசடி

ஆள்மாறாட்டம், இணைய வர்த்தக மோசடி, இணைய காதல், பாலியல் சேவைகள் ஆகியவை அதிக அளவில் நடக்கும் மோசடிகள். இந்த மோசடிகளால் இவ்வாண்டு முதற்பாதியில் மொத்தம் 3,591 சம்பவங்களும் 83.1 மில்லியன் இழப்புத்தொகையும் பதிவாகியுள்ளன. மற்ற வகையான குற்றங்கள் குறைந்திருந்தபோதும் மோசடிகள் ஏறுமுகமாக உள்ளன.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை மின்னஞ்சல் மோசடியின் விளைவாக வர்த்தகங்கள் $32 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்திருப்பதாக போலிசார் கூறினர்.

இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மோசடி தொடர்பாக 276 புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

பாலியல் சேவைகள் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கையும் இவ்வாண்டு வெகுவாகக் கூடியுள்ளது. இவ்வாண்டின் முதற்பாதியில் பதிவாகியுள்ள 692 சம்பவங்கள், கடந்தாண்டின் 315 சம்பவங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

சுற்றுப்பயணத் துறையைப் பொறுத்தவரை இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே ஹோட்டல் அறை முன்பதிவுகள், சுற்றுலாத்தளங்கள் ஆகியவற்றின் தொடர்பில் குறைந்தது 197 இணைய மோசடிகள் நடந்துள்ளன.

குறிப்பாக யூனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரின் பெயரில் பல மோசடிச் சம்பவங்கள் நடப்பதாகப் போலிசார் கூறுகின்றனர்.

அரசு அமைப்புகளின் பெயரி லேயே மோசடிகள் நடைபெறுகின்றன. சட்ட அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவற்றின் பெயரில் புதிய மோசடிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் இருபதுக்கும் அதிகமான புகார்கள் போலிசில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இளையர்கள் விதிவிலக்கல்ல

நன்கு படித்திருப்பதால் தாங்கள் மோசடிக்கு ஆளாகமாட்டோம் என நினைப்பவர்கள் உண்மை யிலேயே மோசடிக்கு ஆளாகும் அபாயத்தை எதிர்நோக்குவதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டோரில் பலர் இளையர்கள் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது. இளையர்களில் பலர் தொலைபேசியில் பேசுவதைக் காட்டிலும் குறுஞ்செய்தி அனுப்புவதை அதிகம் விரும்புகின்றனர். தங்களைவிட வயது அதிகமானோரைக் காட்டிலும் இளையர்களுக்கு இணைய உரையாடல் வசதியாக இருப்பதாக உணர்கின்றனர் என்றது சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட ஓர் அறிக்கை.

இவ்வாறு, கத்தாருக்கு வேலை மாறிய தமது நண்பருடன் ஓராண்டுக்குமேல் ஃபேஸ்புக் வழியாக உரையாடிக்கொண்டிருந்தார் 31 வயது கட்டட நிர்வாகி சுதேஷ் கங்காதரன். அப்போது ஒருநாள், தன் மனைவிக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் உடனே $5,000 அனுப்புமாறும் அந்த நண்பரின் கணக்கிலிருந்து குறுஞ்செய்தி வந்ததாகக் கூறினார் திரு சுதேஷ்.

அந்தப் பணத்தை அனுப்பஇருந்த திரு சுதேஷ், தன் நண்பரை தொலைபேசியில் அழைத்தார். அந்தச் செய்தியைத் தான் அனுப்ப வில்லை என்று நண்பர் கூறிய பிறகுதான் ஆள்மாறாட்டம் நடந்தி ருந்ததை உணர்ந்தார்.

“என் இளம்பருவ நண்பர் என்னுடன் பேசும் தொனியில் ஆள்மாறாட்டம் செய்தவர் பேசியதால் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. மோசடிக்காரர் செயல்படும் முன்னர் எங்களது உரையாடல்களைக் கூர்ந்து கவனித்திருக்கக்கூடும்,” என்றார் திரு சுதேஷ்.

இதே மோசடிக்காரனுக்கு அந்த நண்பரின் மனைவியின் தோழி 5,000 வெள்ளி அனுப்பியதாகக் கூறிய அவர், நல்லவேளையாக அந்தப் பணத்தை மீட்டதாகக் குறிப்பிட்டார்.

ஏமாந்த அந்தப் பெண், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்ட திரு சுதேஷ், மோசடிகளுக்குப் படித்தவர்களும் இளையர்களும் விதிவிலக்கல்ல என்பதை வலியுறுத்த விரும்புவதாகச் சொன்னார்.

விழிப்புணர்வு அவசியம்

ஃபேஸ்புக்கில் மட்டும் மோசடி முயற்சிகள் வெகுவாக அதிகரித்துள்ளன. ஜனவரி மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே குறைந்தது 45 சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்தாண்டில் இதே காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்தம் 740,000 வெள்ளியை இழந்தனர். நெருக்கடியான சமயங்களில் அவசர முடிவுகளை எடுப்பது, ஒருவரது பேராசை போன்றவற்றை மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.

போலிசார் அவ்வப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளபோதும் மக்கள் தங்களது கவனக்குறைவையும் அறியாமையையும் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே கவனிப்பாளர்களின் பொதுவான கருத்து.

இணையத்தைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான சந்தேகத்தை மனதில் கொண்டு விழிப்புடன் இருப்பதே சாலச் சிறந்தது.

எளிதில் ஏமாறும் மூத்தோர்

மோசடிகளில் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 வயதுக்கும் அதிகமானோர் ஆள்மாறாட்ட சம்பவங்களில் ஏமாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஃபேஸ்புக் கணக்குகள் ஊடு ருவப்படலாம் அல்லது போலிக் கணக்குகள் உருவாக்கப்படலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு அந்த வயதுப் பிரிவினருக்கு குறைவாக இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று போலிசார் கூறினர்.

மற்ற வயதினரைவிட முதியவர்கள் பிறரை அதிகம் நம்பக்கூடியவர்கள் என்று போலிசார் தெரி வித்தனர்.

இதுபோன்ற மோசடி முயற்சிகளை அறிந்திருப்பதாகக் கூறும் 32 வயது தீபா கோபாலகிருஷ்ணன், இதில் பெருமளவு பாதிப்படைவது முதியோரே என்றார்.

“பணம் செலுத்தாவிட்டால் வீட்டுத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறும் குறுஞ்செய்திகள் அல்லது ஒலிப்பதிவுகள் எனக்கு வரும். அவை நம்பத்தகுந்தவையாக இல்லாதபோது நான் அவற்றைப் பொருட்படுத்துவ தில்லை. ஆனால் முதியவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன,” என்றார் திருமதி தீபா.

முதியவர்கள், படிக்காதவர்கள் மட்டும் மோசடிகளுக்கு இலக்கா வதில்லை என்று கூறிய சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எமிலி ஆர்டிகா, படித்தவர்களும் விஷயம் அறிந்தவர்களும் ஏமாற்றப்படலாம் என்றார்.

மற்றவர்களை நம்ப வைப்பதற்காக மோசடிக்காரர்கள் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவதாகக் மனோதத்துவ நிபுணர் டாக்டர் லிம் பூன் லெங் தெரிவித்தார்.

மோசடிகளில் ஏமாறாமல் இருக்க யோசனை

வினோதினி கலைக்கண்ணன், 29
தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்

 கைபேசியில் பாதுகாப்பு மென் பொருளை தரவிறக்கி வைத்திருங்கள்.
 கணக்குகளுக்கு பல அடுக்கு (multi-factor authentication) மறைச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.
 மற்றவர் கண்டுபிடிக்க முடியாத மறைச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.
 தரவுகளை வேறு இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.
 பாதுகாப்பற்ற கம்பியில்லா இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
 இணையம் மூலம் பொருட்கள்/சேவைகளைப் பெறும்போது அந்த இணையத்தள முகவரி https:// என ஆரம்பித்திருப்பதை உறுதி செய்யுங்கள். பாதுகாப்பான இணையத்தளங்களில் இணையப்பக்க முகவரி அருகில் பச்சைப்பூட்டு சின்னம் காணப்படும்.
 கூகல் வெளிப்படைத்தன்மை அறிக்கை (Google Transparency Report) என்ற பக்கத்தில் குறிப்பிட்ட இணையத்தளத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்யலாம்.

மோசடியில் இழந்த பணத்தை மீட்பது எப்படி

, 31 குற்றவியல் வழக்கறிஞர்

 முதலில் போலிசில் புகார் செய்ய வேண்டும். பின்னர் அரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
 போலிசாரிடம் புகார் செய்தால் கட்டணம் மிச்சமாகும். போலிஸ் விசாரணைக்கு போதிய ஆதாரங்கள் இல்லாதபோது மஜிஸ்டிரேட்டிடம் புகார் செய்யலாம். விசாரணைக்கான போதிய முகாந்தரம் இருந்தால் மாஜிஸ்ட்ரேட் அதற்கு உத்தரவிடுவார்.
 முடிந்தளவுக்கு அனைத்து ஆதாரங்களையும் அதிகாரிகளிடம் தரவேண்டும். குறுஞ்செய்தி உரையாடல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவேண்டும். போலிஸ் விசாரணைக்கு இவை தேவை.
 ஏமாற்று வேலைகளில் இழந்த பணத்தைத் திரும்பப் பெற எந்த உத்தரவாத மும் இருக்காது. ஒருவேளை மோசடி செய்தவர் பிடிபட்டால், சட்ட நடவடிக்கைகள் மூலம் இழந்ததை மீட்க சாத்தியம் உண்டு.
 கரௌசெல் போன்ற மின்னிலக்கத் தளங்களில் மோசடி நிகழ்ந்தால் அதுகுறித்து அந்தத் தளத்தில் உடனே தெரிவியுங்கள். அரசாங்க அமைப்புகள், நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தும் பிஷ்ஷிங் மோசடி சம்பவங்களில் சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது நிறுவனத்திடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.
 மோசடி செய்தவர் அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டால் அவர், தனது தண்டனையைக் குறைக்க இழப்பீடு கொடுக்க முன்வர லாம். பணத்தைத் திரும்பக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், மோசடி செய்தவரிடம் பணம் இல்லையென்றால் இழந்த பணத்தைப் பெறுவது சிரமமாகும்.

மோசடிகளில் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 வயதுக்கும் அதிகமானோர் ஆள்மாறாட்ட சம்பவங்களில் ஏமாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஃபேஸ்புக் கணக்குகள் ஊடு ருவப்படலாம் அல்லது போலிக் கணக்குகள் உருவாக்கப்படலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு அந்த வயதுப் பிரிவினருக்கு குறைவாக இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று போலிசார் கூறினர்.
மற்ற வயதினரைவிட முதியவர்கள் பிறரை அதிகம் நம்பக்கூடியவர்கள் என்று போலிசார் தெரி வித்தனர்.
இதுபோன்ற மோசடி முயற்சிகளை அறிந்திருப்பதாகக் கூறும் 32 வயது தீபா கோபாலகிருஷ்ணன், இதில் பெருமளவு பாதிப்படைவது முதியோரே என்றார்.
“பணம் செலுத்தாவிட்டால் வீட்டுத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறும் குறுஞ்செய்திகள் அல்லது ஒலிப்பதிவுகள் எனக்கு வரும். அவை நம்பத்தகுந்தவையாக இல்லாதபோது நான் அவற்றைப் பொருட்படுத்துவ தில்லை. ஆனால் முதியவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன,” என்றார் திருமதி தீபா.
முதியவர்கள், படிக்காதவர்கள் மட்டும் மோசடிகளுக்கு இலக்கா வதில்லை என்று கூறிய சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எமிலி ஆர்டிகா, படித்தவர்களும் விஷயம் அறிந்தவர்களும் ஏமாற்றப்படலாம் என்றார்.
மற்றவர்களை நம்ப வைப்பதற்காக மோசடிக்காரர்கள் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவதாகக் மனோதத்துவ நிபுணர் டாக்டர் லிம் பூன் லெங் தெரிவித்தார்.

இணைய காதல் மோசடியில் $262,000 இழப்பு

சிங்கப்பூர் போலிஸ் படையின் வர்த்தக விவகாரப் பிரிவு, மலேசியா, ஹாங்காங், மக்காவ் ஆகிய நாடுகளுடன் இணைந்து மலேசியாவில் இயங்கி வரும் இணைய காதல் மோசடிக் கும்பலை முடக்க செயல்பட்டது.
இந்தக் கும்பலைச் சேர்ந்த மூன்று நைஜீரிய ஆடவர்களும் 11 மலேசிய பெண்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். இதே கும்பலுக்கு பணமாற்றத்திற்கான வசதியை ஏற்படுத்தியதாகக் கூறப்ப டும் நான்கு சிங்கப்பூர் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான அந்தப் பெண்கள் 28 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப் பட்டவர்கள். மொத்தம் $262,000 பெறுமானமுள்ள இழப்புகளுக்கு தொடர்புடைய 30 புகார்களை போலிசார் விசாரித்து வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

மோசடி முறியடிப்பு நிலையம்

மோசடிகளுடன் தொடர்புடையது என சந்தேகப்படும் வங்கிக் கணக்குகளை முடக்க முடியும். முறையற்ற நிதிப் பரிமாற்றங்களைத் தடுப்பதன்மூலம் சிங்கப்பூர் போலிஸ் படையின் மோசடித் தடுப்பு நிலையம், பாதிக்கப்பட்டோரின் இழப்பை முடிந்தவரை குறைக்க முயல்கிறது. ஜூன் 18ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிலையத்தில், முதல் இரு வாரங்களிலேயே 1,000க்கும் அதிகமான புகார்கள் குவிந்தன.

மோசடி முறியடிப்பு எண்
1800 722 6688
www.scamalert.sg

போலிசை தொடர்புகொள்ள
1800 255 0000
www.police.gov.sg/iwitness.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!