தமிழ் முரசோடு வளரும் தலைமுறை

அன்றைக்கு எனது அப்பாவுக்கு, முக்கியமாக அவர் எடுத்து வரும் தமிழ் முரசுக்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். அன்று ஜூன் 15-ஆம் தேதி. செய்தித்தாள் படிப்பதில் அதிக நாட்டம் காட்டாத நான், அதுவரையில் நான் அப்படி பரபரப்போடு அப்பாவுக்காகக் காத்திருந்தில்லை. காலை 11 மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்த அப்பாவின் கையிலிருந்த தமிழ் முரசை வாங்கி நான் எழுதிய முதல் செய்தியைப் பார்த்தபோது, ஒரு சாதனை நிகழ்த்திய உற்சாகம், பெருமிதம்.

இருள் விலகாத விடியற்காலையில், ஓய்ந்து கிடக்கும் அமைதியான சாலையில் அப்பாவின் வாகனத்தில் பயணம் செய்திருக்கிறேன். அந்தப் பொழுதையும் ரசித்திருக்கிறேன். என்னையும் எனது அக்கா, தம்பியையும் வளர்க்க அப்பா கடினமாக உழைப்பதை எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் 23 ஆண்டுகளாக அப்பா செய்து வரும் செய்தித்தாள் விநியோகம் குறித்து யோசித்ததில்லை.

தமிழ் முரசில் பணிக்குச் சேர்ந்த இந்த ஒரு மாத காலத்தில் செய்தித்தாள் தொழிலில் என் அப்பா இ. இளங்கோவன் ஆற்றும் முக்கிய பங்கை உணர்கிறேன்.

சிக்கலான வாடிக்கையாளர்கள், செய்தித்தாட்களை நனைத்து தலைவலி தரும் மழை, 6.30 மணிக்குள் செய்தித்தாட்களை விநியோகம் செய்துவிடவேண்டும் என்ற கட்டாயம், அவ்வப்போது செய்தித்தாள் கட்டுகளை சொல்லாமல் எடுத்து செல்பவர்கள், ஊழியர் பற்றாக்குறை எனப் பல சவால்களை தினமும் சமாளிக்கிறார்கள்.

அவசரநிலை ஏற்பட்டாலும் காலையில் வேலையை முடித்துவிட்டுத்தான் அதைக் கவனிக்க முடியும். கடந்த 10 ஆண்டுகளில் இருமுறைதான் வெளிநாடு சென்றிருக்கிறார் அப்பா. அப்போது தனது வேலையை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். தரைவீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பத்திரிகை விநியோகித்தபோது பலமுறை ஈரமான சாலைகளில் விபத்துகளைச் சந்தித்துள்ளார்.

அப்பா விடியற்காலை 2.30 மணிக்கு எழும்புவார். முகத்தைக் கழுவிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்புவார். பிடோக் நார்த்தில் செய்தித்தாள் இறக்கும் இடத்தில் அவர் 3.30 மணிக்குள் இருக்க வேண்டும்.

அந்தப் பகுதிக்கான ஆங்கில, சீன, தமிழ், மலாய் நாளிதழ்களை ஒரு பெரிய லாரி கட்டுக்கட்டாக இறக்கிவிட்டுப்போகும். கட்டுகளைப் பிரித்து அப்பா பகுதி பகுதியாக அடுக்குவார். தனித் தனிப் பிரிவுகளாக இருக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் போன்ற நாளிதழை ஒன்றாகச் சேர்க்க வேண்டும். பிறகு வீடுகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

அப்பா, அம்மா, உதவிக்கு வரும் ஒருவர் என மூன்று பேரும் அந்தப் பகுதியில் நாளிதழ்களைக் கொண்டு கொடுத்து முடிக்க 10 மணிக்கு மேல் ஆகிவிடும். அதன் பிறகுதான் வீட்டுக்கு வந்து பசியாறுவார்.

அப்பாவின் சொந்த ஊர் தமிழகத்திலுள்ள பட்டுக்கோட்டை. மண்ணியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவர் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார். இங்கிருந்த பெரியப்பா நெடுஞ்செழியனின் ஆதரவோடு 1997ஆம் ஆண்டு 37வது வயதில் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து இந்தப் பணியைச் செய்து வருகிறார்.

சிங்கப்பூரில் செய்தித்தாள் விநியோகத் துறையில் நீண்ட காலமாக தமிழர்கள்தான் கோலோச்சி வந்தனர். இதில் பலர் பட்டுக்கோட்டை, அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வந்தவர்கள்.

எனது அப்பாவின் சித்தப்பா திரு ராமலிங்கம் 1950களிலிருந்து 1995 வரையில் இங்கு செய்தித்தாள் விநியோகிப்பாளராக இருந்தவர். அவர் தர்மக் கப்பலில் சிங்கப்பூருக்கு வந்தார் என்ற அப்பா, இப்படி வந்த பலர் குடும்பங்களை ஊரிலேயே விட்டு வந்ததால், பலரும் ஊருக்குத் திரும்பி விட்டார்கள் என்றார்.

எனது பெரியப்பா திரு நெடுஞ்செழியனின் தாத்தா இரண்டாம் உலகப்போரின் போது காசாங்காடு எனும் ஊரிலிருந்து வந்து இத்தொழிலில் ஈடுபட்டார். அவரிடம் இருந்து எனது பெரியப்பாவின் தந்தை, பிறகு எனது பெரியப்பா என மூன்று தலைமுறைகளாக தொடர்கிறார்கள். 25 வருடங்களாக இத்தொழிலைச் செய்து வரும் பெரியப்பா, என் அப்பா இருவருக்கும் பிறகு இதை எடுத்து நடத்த எங்கள் குடும்பத்தில் யாரும் இல்லை. எனது அக்கா மருத்துவர், பெரியப்பாவின் பிள்ளைகளும் மருத்துவராகவும் பொறியியலாளராகவும் இருக்கின்றனர்.

“நான் இத்தொழிலுக்கு வந்தபோது ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தார்கள். அதற்குமுன் இன்னும் அதிகம். ஆனால் இப்போது பாதிக்கும் மேல் குறைந்து விட்டது,” என்றார் அப்பா.

“விற்பனை சரிவு, ஊழியர் பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் வரு மானம் மிகக் குறைந்து விட்டது. உழைப்பு அதிகம் தேவைப்படும் இந்த தொழிலைச் செய்ய விவேகமும் வேண்டும். இன்றைய இளைஞர்களும் இதுபோன்ற வேலைகளை விரும்புவதில்லை. என்னைப்போல் பல விநியோகிப்பாளர்களும் தங்களது பிள்ளைகள் இந்த வேலையை தொடர விரும்பு வதில்லை,” என்று அப்பா இது அழிந்து வரும் தொழில்களில் ஒன்று என்றார்.

“எல்லா தகவல்களையும் செய்திகளையும் இப்போது இணையம் வழி பெற முடிகிறது. அச்சு இதழை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விளம்பர வருமானம் குறைந்துவிட்டதால் பத்திரிகைகளும் சுருங்கிவிட்டன. வரும் காலத்தில் செய்தித்தாள் விநியோகத் தொழில் இருக்குமா என்பது சந்தேகம்தான்,” என்றவர், தன்னால் முடிந்தவரையில் இந்த வேலையில் தொடர்ந்து இருப்பேன் என்றார்.

“இந்த வேலை எனக்கு பல இன நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. தினமும் காலையில் பேப்பர் போடும்போது வாடிக்கையாளர்களுடன் உரையாடுவேன். சீனப்புத்தாண்டு, தீபாவளி என விழாக் காலங்களில் எனக்கு வாழ்த்துச் சொல்லி அன்பளிப்புகள் கொடுப்பார்கள்,” என்று குழந்தையின் மகிழ்ச்சியுடன் 62 வயது அப்பா சொன்னபோது, நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் செய்திக்காக நான் சந்தித்தவர்களைப் பற்றிச் சொல்வேன் என்று நினைத்துக்கொண்டேன்.

நான் தமிழ் முரசில், செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகிறது. கொவிட்-19 காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறேன்.

தேசிய பல்கலைக்கழகத்தில் கட்டுமான துறை திட்ட நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்தவுடன் ஏற்றிருக்கும் முதல் முழு நேர பணி இது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் எஸ்பிஎச்சின் உபகாரச்சம்பளத்தை பெற்றபோது இங்கேயே வேலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

சிறு வயதிலிருந்தே வீடு முழுவதும் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் என்று பல்வேறு செய்தித்தாட்களும் குவிந்து கிடக்கும் காட்சியைப் பார்த்து வளர்ந்த எனக்கு, செய்தி எழுதுவது ஒரு புதிய அனுபவம். செய்திகளை திரட்டி, தேர்ந்தெடுத்து, அதை எழுதி, சரி பார்த்து, பக்கங்களை வடிவமைத்து, அதை அச்சு அடித்து, இறுதியில் விநியோகிப்பாளர் அதை நாடெங்கும் விநியோகிக்கிறார்.

“தினமும், செய்தித்தாள் கட்டுகளை கண்டவுடன் முதலில் கட்டிலிருந்து ஒரு தமிழ் முரசை எடுத்து தலைப்புச் செய்திகளைப் படித்ததற்கு பிறகுதான் எனது வேலையைத் துவங்குவேன்,” என்ற அப்பாவின் உரிமையோடான பெருமிதம் இப்போது என்னையும் தொற்றிக்கொண்டு விட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!