கனவை நனவாக்க கடல்தாண்டி வந்த ரமேஷ்

வி.கே.சந்தோஷ் குமார்

கடந்த 2011ஆம் ஆண்டு திரு காளிமுத்து ரமேஷ் சிங்கப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டபோது, அது சிறிய பயணமாகவே இருக்கும் என்று அவரின் மனத்தில் தோன்றியது.

தமிழ்நாட்டின் இராமநாதபுர மாவட்டம், கீழ்க்குடி எனும் சிற்றூரைச் சேர்ந்த கட்டுமான ஊழியரான ரமேஷுக்கு இங்கு வேலை கிடைத்தது. ஆனாலும், தாம் பேரார்வம் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டைத் தொடர முடியுமா என அப்போது அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.

பதினொரு ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போது இவர் சிங்கப்பூரின் உள்ளூர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஆட்டக்காரராகத் திகழ்கிறார்.

தமது வேகப் பந்துவீச்சுத் திறனையும் பந்தடிப்பு வல்லமையையும் கடந்த மாதம் 18ஆம் தேதி நடந்த வெஸ்ட்லைட் ஒருங்கிணைப்புக் கிண்ணப் போட்டியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் திரு திரு ரமேஷ். இவர் உடலுறுதி மிக்கவராகவும் துடிப்பானவராகவும் களத்தில் விவேகமாகச் செயல்படுபவராகவும் விளங்குகிறார்.

"திடலின் எல்லாத் திசைகளிலும் பந்தடிக்கும் திறன்கொண்டவராக உள்ளார் திரு ரமேஷ்," என்று பாராட்டினார் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிங்கப்பூர் விளையாட்டாளருமான தர்மிசந்த் முலேவா.

"நல்ல வேகத்தில் பந்துவீசும் திறன் படைத்தவராக இருக்கும் அவர், தேசிய அணி வீரர்களுக்கும் சவால் அளிக்கும் வகையில் பந்து வீசுகிறார்," என்றும் முலேவா சொன்னார்.

முன்னணிக் குழுக்களுக்காக விளையாடுவோர் மணிக்கு 115-130 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் நிலையில், ரமேஷின் பந்துவீச்சு வேகம் 140 கிலோமீட்டரைத் தொடுகிறது.

"சொந்த ஊரில் நெல் வயல்களில் வேலை செய்ததின் மூலம் நான் வலுவான தோள்களைக் கொண்டுள்ளேன்," என்றார் திரு ரமேஷ்.

தம்மால் வேகமாகவும் துல்லியமாகவும் பந்துவீச முடியும் எனக் கூறும் இவர், முக்கியமாக தமது பந்துவீச்சில் எளிதில் ஓட்டம் சேர்க்க முடியாது என்றும் சொல்கிறார்.

தமது 13வது வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய இவர், அப்போது முதலே வேகப் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். 

தமது ஊர் அணிக்காகவும் பின்னர் வட்ட அளவிலும் விளையாடிய இவர், தொழில்முறையாக விளையாடும் ஆர்வத்துடன் 2006ல் சென்னைக்குப் புறப்பட்டார்.

கல்லூரிக்குச் சென்றபோதும் தமக்கு உயர்கல்வியில் நாட்டமில்லை என்றார் இவர்.

"அதனால் வீட்டைவிட்டுக் கிளம்பி, சென்னையில் பல்பொருள் அங்காடி ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்தேன். ஆனாலும், முகவர்கள் பணம் கேட்டதாலும் என்னிடம் பணம் இல்லாததாலும் முழு நேரமாக கிரிக்கெட் விளையாடுவது எளிதாக இல்லை," என்று திரு ரமேஷ் நினைவுகூர்ந்தார்.

அதனால், வீட்டிற்குத் திரும்பிச் சென்று, தம் பெற்றோரிடம் பணம் கேட்டார்.ஆனால், வேலை தேடிக்கொண்டால் வீட்டில் இரு, இல்லாவிடில் வெளியே போய்விடு என்று கூறிவிட்டார் இவரின் தந்தையார் திரு காளிமுத்து, 60.

ஆயினும், தம் தாயார் மூக்காயி, 52, தனது கிரிக்கெட் ஆர்வத்திற்கு ஆதரவாக இருந்ததாக திரு ரமேஷ் சொன்னார்.

கிரிக்கெட்டை விட்டுவிட்டு வீட்டிலேயே இருப்பது கடினமாக இருந்ததால், தமது கிரிக்கெட் கனவு கைகூட பணம் ஈட்டுவதற்காக சிங்கப்பூருக்குக் கிளம்பி வந்தார்.

அப்போது, சிங்கப்பூரில் தம்மால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று இவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.

"நான் இங்கு வந்தபின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சக ஊழியர்கள் கைகளில் மட்டையுடன் கிளம்பியதைக் கண்டேன். அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்கள் விளையாடியதைக் கண்டேன். மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று அவர்களுடன் சேர்ந்து விளையாடினேன். விரைவில், பலரும் எனது தொடர்பு எண்ணைக் கேட்கத் தொடங்கினர்," என்றார் திரு ரமேஷ்.

இப்போது, சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க பிரிமியர் லீக்கில் மில்லெனியம் யுனைடெட் கிரிக்கெட் குழுவிற்காக இவர் விளையாடி வருகிறார். அத்துடன், இவரது தலைமையிலான வெளிநாட்டு ஊழியர்களின் `தமிழ் தலைவாஸ்' அணி பல தொடர்களில் வாகை சூடியுள்ளது. வெஸ்ட்லைட் ஒருங்கிணைப்புக் கிண்ணமும் அவற்றில் ஒன்று.

"என்னால் அதிரடியாக ஆடி 50, 60 ஓட்டங்களைக் குவித்து, ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்," என்று உறுதியாகக் கூறுகிறார் திரு ரமேஷ்.

அதுபோல், தம்மால் நேர்த்தியான `லைன் அண்ட் லெங்த்'தில் பந்துவீச முடியும் என்றும் ஒருநாள், டி20 போட்டிகளில் தம்மால் ஆல்ரவுண்டராக மிளிர முடியும் என்றும் இவர் சொன்னார்.

சிங்கப்பூர் தேசிய அணிக்காகவும் ‘ஐபிஎல்’ எனப்படும் இந்திய பிரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பது இவரது கனவு.

“எனக்கு காரோ வீடோ வேண்டாம். அனைத்துலகப் போட்டிகளில் விளையாடி, தொலைக்காட்சியில் நான் தோன்றினால் போதும்,” என்கிறார் திரு ரமேஷ்.

கிரிக்கெட் ஒன்றே குறிக்கோள் என்றிருக்கும் இவருக்கு கிரிக்கெட் வட்டாரத்தைத் தாண்டி வேறு நண்பர்களே இல்லை.

“வேலை செய்வேன், விளையாடுவேன், தேக்கா செல்வேன். அவ்வளவுதான்!” என்கிறார் ஸ்ரீ சப்ரி எஞ்சினியரிங் நிறுவன ஊழியரான திரு ரமேஷ்.

தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான தகுதிகள் ரமேஷுக்கு உண்டு என்று சொல்கிறார் தேசிய அணி வீரரான திரு கார்த்திக் சுப்பிரமணியன்.

அனைத்துலக கிரிக்கெட் மன்ற விதிகளின்படி, சிங்கப்பூரில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் திரு ரமேஷ் சிங்கப்பூர் சார்பாக அனைத்துலகப் போட்டிகளில் விளையாட முடியும். இந்தியாவில் இருந்து வந்த வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் ஏற்கெனவே சிங்கப்பூர் அணிக்காக விளையாடியுள்ளனர்.

“ரமேஷின் வேகப் பந்துவீச்சும் அதிரடிப் பந்தடிப்பும் பெரிதும் ஈர்க்கத்தக்கவை. ஒருநாள் அவர் சிங்கப்பூர் அணிக்காக விளையாடி, நம்மையெல்லாம் பெருமைப்படுத்துவார் என்று நம்புகிறேன்,” என்றார் திரு கார்த்திக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!