அரசியலும் பேசிய விஜயகாந்த்-ஸ்டாலின்

சென்னை: விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
நேற்று கட்சி நிர்வாகிகளுட னான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் நடிகர்  ரஜினிக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப் பிட்டார். 
இம்முறை மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்றும், தேமுதிகவின் பலத்துக்கு ஏற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கப் படும் என்றும் அவர் கூறினார். 
அப்போது விஜயகாந்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்தபோது அரசியல் குறித்து ஏதும் பேசப்பட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “அரசியலும் பேசப்பட் டது,” என்று சூசகமாகத் தெரிவித்தார்.
“தமிழகத்தில் பெரிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணிக்கு முயற்சித்து வருகின்றன. தேமுதிக வுக்கு உரிய தொகுதிகளை வழங்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அது எந்தக்  கட்சி என்பது இன்னும் முடிவாகவில்லை. அதை விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார்,” என்றார் பிரேமலதா. 

இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கும் தேமு திகவினர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று அவர் அறிவித்தார். நேற்றே மனுக்களை யும் அவர் விநியோகம் செய்தார். 
நடிகர் விஜயகாந்தும் மு.க. ஸ்டாலினும் இரு தினங்களுக்கு முன்பு விஜயகாந்தின் உடல்நலம் குறித்து மட்டுமே விசாரிக்க அவரைச் சந்தித்ததாகக் கூறப் பட்டது. இந்நிலையில் அரசியலும் பேசப்பட்டதாக பிரேமலதா கூறி யிருப்பது கவனிக்கத்தக்கது.
பிரதமர் மோடியின் தூதராகவும், அதிமுக - பாஜக அணியில் இணைய வேண்டும் என வலியுறுத்துவதற்காகவுமே ரஜினி நேரில் சென்று விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக ஒரு தகவல் பரவியுள்ளது.
இந்தச் சந்திப்புகள் நட்பு ரீதியானது என்று முதலில் கூறப்பட்டது. நடிகர் ரஜினியும் இந்தச் சந்திப்பில் அரசியல் ஏதுமில்லை என்றார். இப்போது அதற்கு நேர்மாறாக, அரசியல் பேசப்பட்டது என்று கூறியுள்ளார்.
எனவே அதிமுக தரப்புக்கு ஆதரவாக ரஜினியும், திமுக தரப்புக்காக அக்கட்சித் தலைவரே நேரடியாகவும் சென்று விஜய காந்தை சந்தித்ததாகவே கருத வேண்டியுள்ளது.