வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கொலை; இளையர் கைது

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை வாடகைதாரர் குத்திக் கொன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.

குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற 21 வயது இளையர் தம் பெற்றோருடன் வாடகைக்கு குடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே வீட்டின் மற்றொரு பகுதியில் குணசேகர் வசித்து வந்தார்.

கடந்த நான்கு மாதங்களாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், அஜித் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால், வீட்டின் உரிமையாளரான குணசேகர், அஜித்தின் பெற்றோரிடம் வாடகை கேட்டதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில் அஜித் வீட்டில் இல்லை எனவும் இரவு வீடு திரும்பிய பிறகு பெற்றோர் மூலம் விஷயத்தைக் கேட்ட அஜித், குணசேகரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தகராறு முற்றிய நிலையில், தம்மிடம் இருந்த கத்தியால் குணசேகரை சரமாரியாக அஜித் தாக்கியதாகவும் குணசேகர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அஜித்தை கைது செய்த போலிசார், குணசேகரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனா கிருமிப் பரவல் காரணமாக ஊரடங்கு நடப்பில் இருந்த காலகட்டத்தில் வாடகை கேட்க வேண்டாம் என்று தமிழக அரசு வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.