உலக சுகாதார நிறுவனம்: மக்களுக்கு முதல் எதிரி கொரோனா கிருமி

உலக மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும்; இந்த கொரோனா கிருமிதான் மக்களுக்கு முதல் எதிரி என்று அறைகூவல் விடுத்துள்ளார் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அடேனம் ஜெப்ரியிசஸ்.

சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து உலக நாடுகள் பலவற்றுக்கு அதிவேகத்தில் பரவி வரும் கொரோனா கிருமிக்கு, ‘கொவிட்-19’ என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக பெயரிட்டதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா கிருமித்தொற்றுக்கு 1,100க்கு மேலானோர் பலியாகியுள்ள நிலையில் கிருமிப் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 45,000ஐத் தாண்டிவிட்டது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் சீனாவின் கொரோனா கிருமித் தொற்று சம்பவங்கள் ஒரு முடிவுக்கு வரலாம் என்று அந்நாட்டின் மூத்த மருத்துவ ஆலோசகர் முன்னுரைத்துள்ளார். 

இருப்பினும், உலகளவில் பயங்கரவாதத்தைவிட மிக மோசமான மிரட்டலாக இந்த கொரோனா கிருமி உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“அரசியல், சமூக, பொருளியல் ரீதியாக கொந்தளிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலையும்விட ஒரு கிருமி சக்தி வாய்ந்தது,” என்றார் டாக்டர் டெடுரோஸ்.

பயணத் தடைகள், உற்பத்தித் தடைகள், தனிமைப்படுத்தும் உத்தரவு என அனைத்து நடவடிக்கைகளின் தாக்கமும் சீனாவின் பொருளியலை வெகுவாகப் பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய கொரோனா கிருமி பெருமளவில் தொற்றக்கூடிய சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு அதற்காக ஆயத்தமாகுமாறு உலகச் சுகாதார நிறுவனம் மலேசியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் அண்மையில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருவதன் தொடர்பில் இந்த எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது.

அத்துடன் கிருமித்தொற்று தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாக நிறுவனத்தின் மேற்கு பசிபிக் இயக்குநர் டாக்டர் டகெஷி கசாய் கூறினார்.

பெருமளவில் பாதிக்கும் தன்மையை கொரோனா கிருமி பெற்றுவிட்டால், எளிதில் பாதிப்படைவர்களை பாதுகாக்கும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“புதிய நோய் என்பதால் பதற்றம் இருக்கவே செய்யும். முடிந்தவரை தயார்ப்படுத்திக்கொள்வோம்,” என்றார் டாக்டர் கசாய்.

இக்கிருமிக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரக் கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும்.

சீனாவைத் தவிர மற்ற 24 நாடுகளில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 319ஐ எட்டியுள்ளது. இதுவரை ஹாங்காங்கில் ஒருவரும் பிலிப்பீன்சில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

#தமிழ்முரசு #கொரோனா #கொவிட்-19

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon