அமளி அலைகளை ஏற்படுத்திய அதிரடிக் கைது

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பிலான குற்றச்சாட்டின்கீழ் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு சுமார் 9.45 மணிக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் திரு சிதம்பரத்தின் வீட்டுக்குள் புகுந்து கைது செய்தனர். இது குறித்து அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்:

கார்த்தி சிதம்பரம்:

திரு கார்த்தி, தனது தந்தை கைது  செய்யப்பட்டதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் காழ்ப்புணர்ச்சியே காரணம் எனக் குறைகூறியுள்ளார்.

இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவினர் கண்டு களிப்பதற்காகவே இந்த நாடகம் நடத்தப்படுவதாக அவர் டுவிட்டரில் கூறினார்.

“அமைப்புகளால் நடத்தப்படுகிற இந்தக் கூத்தும் கும்மாளமும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகத்தான்.  சிலர் இவற்றைக் கண்டு நாராசமான இன்பத்தை அடைகின்றனர்,” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்தார். தானும் தனது தந்தையும் அரசியல் சதியால் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய நாட்டிற்கே அவமானம். இந்த செயலை நான் கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

சசி தரூர்:

படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

ஓடி ஒளிபவனுக்கு நிழல்கூட பேயைப் போல் தென்படும் என்று திரு சிதம்பரம் கடந்தாண்டு தெரிவித்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் டுவிட்டரில் கருத்துரைத்தார்.

 

“நன்கு சொன்னீர்கள் சிதம்பரம்! துன்பமும் நற்பெயருக்குக் களங்கமும் விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக நீங்கள் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் குரல்கொடுத்துள்ளது உங்களது நற்பண்புகளின் உறுதிக்குப் பெருமை சேர்க்கிறது. இறுதியில் வாய்மையே வெல்லும் என நான் நம்புகிறேன். அதுவரையில் சில விஷம புத்திக்காரர்களின் கேவல இன்பத்திற்கு நாம் இடம் கொடுத்தாகவேண்டியுள்ளது,” என்றார் திரு தரூர்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோல்கத்தாவின் கடலோர விடுதியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, மிகவும் மோசமானது. சில நேரங்களில் அந்த முறை சரியாக இல்லை. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சட்ட அதிகாரத்தைப் பற்றி நான் பேசவில்லை… சிதம்பரம் மூத்த அரசியல்வாதி. அவர் இந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.

தேஜஸ்வி சூர்யா:

திரு சிதம்பரத்தின் கைது  குறித்து கருத்துரைத்த பாஜகவினரில் முதலாமவரான பெங்களூருவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா,” நீங்கள் எப்படிப்பட்ட பலவானாக இருந்தாலும் உனக்கு மேலே சட்டம் உள்ளது,”என்று டுவிட்டரில் கூறினார்.

காங்கிரஸ் பேச்சாளர் ரந்தீப் சிங் சுர்ஜெவாலா:

ப.சிதம்பரத்தின் கைது குறித்து காங்கிரஸ் இன்று காலை இந்திய நேரப்படி சுமார் 10.30 மணிக்குச் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. அதில் காங்கிரஸ் பேச்சாளர் ரந்தீப் சிங் சுர்ஜெவாலா,” முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சராகப் பணியாற்றிய திரு சிதம்பரம் இவ்வாறு வெறுப்புணர்வோடு துன்புறுத்தப்படுவது திரு மோடி அரசாங்கத்தின் காழ்ப்புணர்வைக் காட்டுகிறது. பொருளியல் பாதிப்படைந்து ரூபாய் நாணயம் நலிவடைந்திருக்கும் இந்நிலையில் இவ்வாறு நடக்கிறது,” என்று தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்

திரு சிதம்பரத்தின் கைது தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். “வேட்டி கட்டிய தமிழர்கள் டெல்லியில் கோலோச்சிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். காமராஜர் போன்ற தூய்மையான அரசியல்வாதிகளைப் பார்த்த நாம், இன்று வேட்டி கட்டிய ஒரு தமிழராக சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.  அது மட்டுமல்லாமல் இந்த வழக்கை அவர் எதிர்கொண்ட விதம் உண்மையிலேயே மோசமான முன்னுதாரணம்.” என்றும் அவர் கண்டித்திருக்கிறார்.

தொல் திருமாவளவன்

திரு சிதம்பரத்தின் கைது  திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என்று தமிழக விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமித் ஷா கைது செய்யப்பட்டதற்கு இது பழிவாங்குவதாக அவர் கூறினார்.