கெப்பலில் கட்டப்படவிருக்கும் வீடுகள் “லாட்டரியாகக்” கருதப்படுமா எனக் கேள்வி

தற்போது கெப்பல் மனமகிழ் மன்றமும் அதன் குழிப்பந்து திடலும் அமைந்திருக்கும் நிலப்பகுதியில் கட்டப்படவிருக்கும் பொது வீடுகளும் தனியார் வீடுகளும் “லாட்டரியாகக்” கருதப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மனமகிழ் மன்றத்தின் குத்தகைக்காலம் 2021 டிசம்பர் 31ஆம் தேதி காலாவதியான பிறகு, அங்கு சுமார் 9000 வீடுகள் கட்டப்படும் எனப் பிரதமர் லீ சியன் லூங் தேசிய நாள் பேரணி உரையில் உறுதிப்படுத்தினார். அவற்றுள் எத்தனை தனியார் வீடுகளாகவும் எத்தனை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளாகவும் இருக்கும் என்பது இன்னும் தெரியாவிட்டாலும், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு வெகு அதிகமான வரவேற்பு இருக்கும் என சொத்து வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தஞ்சோங் பகாரில் கட்டப்பட்ட “பினகல்@டக்ஸ்டன்” குடியிருப்பு 2004ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தபோது, 1848 வீடுகளுக்குக் கிட்டத்தட்ட 5000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். முடிவில் குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்தக் குடியிருப்பில் ஒரு வீடு கிடைப்பது லாட்டரி வெல்வதைப் போல இருந்தது. 

இங்கு வீடு வாங்கிய சிலருக்கு உண்மையில் லாட்டரி அடித்தது என்றும் சொல்லலாம். சென்ற ஆண்டு 18 பினகல் வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேலான விலையில் விற்கப்பட்டன. 

எதிர்காலத்தில் நகர்ப்பகுதியில் விற்கப்படும் பொதுக் குடியிருப்புகளை “நியாயமான, சமத்துவமான” முறையில் விற்பனை செய்ய மாறுபட்ட முறையை அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று 2016ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார். 

கூடுதலான குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டம், கூடுதலாக மறுவிற்பனை தீர்வை அல்லது குறைவான குத்தகைக்காலம் போன்றவை உத்தேச நடவடிக்கைகளில் உள்ளடங்கலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார். 

இதுபோன்ற நடவடிக்கைகள் புதிய கெப்பல் குடியிருப்புக்குப் பயன்படுத்தப்படலாம் என சொத்து வல்லுநர்கள் கூறுகின்றனர். 

குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தைத் தற்போதைய ஐந்து ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என நைட் ஃபிராங்க் நிறுவனத்தின் டாக்டர் லீ கூறுகிறார். 

குத்தகைக் காலத்தைக் குறைப்பதைவிட குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தை நீட்டிப்பதே அதிக பயனளிக்கக்கூடும் என்கிறார் எஸ்எல்பி சொத்து நிறுவனத்தின் சந்தைப்பிரிவு இயக்குநர் அன்னா இயோ. 

வீடு வாங்குவோர் பிற்பாடு தங்களது வீடுகளை விற்கும்போது, முன்னதாக அரசாங்கத்திடமிருந்து பெற்ற மானியங்களைத் திருப்பிக்கொடுக்கச் செய்யலாம் என்று டாக்டர் லீ மற்றொரு யோசனை கூறுகிறார். 

ஆனால், “லாட்டரி” வெல்லும் அதிர்ஷ்டம் இருக்கும் ஒருவருக்கு எதிராக ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வேறு சிலர் கேள்வி கேட்கின்றனர். 

“தற்போதைய நடைமுறை நியாயமானது என நினைக்கிறேன்,” என்கிறார் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளரும் லீ குவான் இயூ புத்தாக்க நகரங்கள் நிலையத்தின் திட்டத் தலைவருமான டாக்டர் ஹார்வி நியோ. 

கெப்பல் வீடுகளின் மறுவிற்பனை மதிப்பு பினகல் வீடுகளைப் போல அவ்வளவாக உயராது என்றும் அவர் கருதுகிறார். ஏனெனில், பினகலைவிட கெப்பலில் கூடுதலான வீடுகள் கட்டப்படுகின்றன.