பேருந்து ஒப்பந்தம்: நிலப்போக்குவரத்து ஆணையத்திற்கு $1 பில்லியன் பற்றாக்குறை

அரசாங்கத்திடமிருந்து ஒப்பந்தங்கள் பெறுவதற்கான செலவைக் காட்டிலும் எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் போன்ற பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் வசூலித்த பேருந்துக் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு ஏறத்தாழ $1 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018/2019 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ள ஆணையம், தனக்கு $1.013 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பேருந்துக் கட்டணங்களை வசூலித்ததன் மூலம் கிடைத்த வருவாய் $834 மில்லியனாக இருந்தது. அத்துடன், $78 மில்லியன் மதிப்பிலான இதர வருவாயுடன், ஆணையம் தனது அன்றாட செயல்பாடுகளிலிருந்து $912 மில்லியன் வருவாயை வசூலித்துள்ளது. ஆனால், அதன் செலவினம் $1.952 பில்லியனாக பதிவானது. இதனால், ஏறத்தாழ $1 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகை, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த தொகையைவிட 50 விழுக்காடு அதிகம்.

பேருந்து ஒப்பந்த முறைப்படி, அன்றாட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை. கட்டண வருவாயையும் அரசாங்கம் வசூலிக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்திற்காக போக்குவரத்து நிறுவனங்கள் ஏலத்தில் பங்குபெறும் அல்லது பேரப்பேச்சுகளில் ஈடுபடும்.
பேருந்து ஒப்பந்தங்கள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்து வருகின்றன. சிங்கப்பூரின் ஆகப் பெரிய பேருந்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் நிகர லாபம் 70 விழுக்காடு உயர்ந்தது. அதாவது, டிசம்பர் 31, 2018 முடிவுறும் ஆண்டில் நிகர லாபம் $80.1 மில்லியனாக இருந்தது.

இருந்தபோதும், பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு உயர்வான சேவைத் தரத்தை எட்டவேண்டும்.
பேருந்து ஒப்பந்த முறை 2016ல் தொடங்கப்பட்டது முதல், இரண்டு மணிநேர உச்ச வேளையில், அனைத்து பேருந்துகளும் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் செயல்படவேண்டும். இதற்கு முன்பாக, ஒரு மணிநேர உச்ச வேளையில் 90 விழுக்காடு பேருந்துகள் 10 நிமிடங்கள் வரையிலான இடைவெளியில் செயல்பட வேண்டியிருந்தது.

நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு இந்தப் பற்றாக்குறை அதிகரித்து வந்தாலும், ஹாங்காங்கிற்கு அடுத்து சிங்கப்பூர் ஆகக் குறைவான பேருந்துக் கட்டணங்களைக் கொண்டிருப்பதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. சிங்கப்பூரின் பேருந்துக் கட்டணம் ஒரு இடம்-கிலோமீட்டருக்கு நான்கு காசு என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இது, ஹாங்காங்கின் 2.3 காசைவிட அதிகம் என்றாலும் லண்டன், டொரோண்டோ, நியூயார்க் போன்ற மேற்கத்திய நகரங்களைவிட குறைவு. தைப்பே, சோல், தோக்கியோ உள்ளிட்ட வேறு சில ஆசிய நகரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

பற்றாக்குறையைப் பற்றி கருத்துரைத்த சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக (எஸ்யுஎஸ்எஸ்) போக்குவரத்துப் பொருளியல் நிபுணர் வால்ட்டர் தெசேரா, பேருந்து ஒப்பந்த முறை நிதி சேமிப்பது பற்றியதல்ல எனத் தெரிவித்தார். அது பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பேருந்துச் சேவை உயர்தரமாக இருப்பதையும் பேருந்துகள் அடிக்கடி வருவதையும் உறுதி செய்வது பற்றியது என்று அவர் கூறினார்.

“பேருந்து சேவைகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் கொடுக்கும் விலை, விரும்பத்தகுந்த சேவை தரத்திற்கேற்ற ஆகக் குறைவான விலையா என்பதே உண்மையான கேள்வி,” என்றார் இணைப் பேராசிரியர் வால்ட்டர் தெசேரா. இது கடினமான கேள்வி என்றாலும் சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஒப்பந்த முறை மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இந்த விவகாரம் குறித்து எஸ்யுஎஸ்எஸ் நகர போக்குவரத்து நிபுணர் பார்க் பியூங் ஜூன் கூறுகையில், “நிலப்போக்குவரத்து ஆணையம் போக்குவரத்துத் தரநிலைகளை வகுக்கிறது. ஆனால், கட்டணங்கள் வழி வசூல் செய்து எப்படி என்பது குறித்து முடிவு செய்வது பொதுப்போக்குவரத்து மன்றம்,” என்றார். “என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு முடிவுகளை ஒரு அமைப்பு எடுப்பது நல்லது” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், ரயில் துறைக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் பேருந்துகளுக்கான சலுகைகளைப்போல உள்ளன. கடந்தாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி அரசாங்கம், ரயில் துறைக்குக் கொடுத்துள்ள சுமார் $2.5 பில்லியனில் சுமார் $1.3 பில்லியன் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. அன்றாடம் பயன்படுத்தப்படும் ரயில் சொத்துகளைப் புதுப்பிப்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $4.5 பில்லியன் செலவு செய்யவிருப்பதாக அரசாங்கம் இவ்வாண்டு மார்ச் மாதம் அறிவித்தது. அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக $1.9 மில்லியன் ரயில் உரிமக் கட்டணத்தை வசூலித்ததாக நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூரில் ஆகப் பெரிய ரயில் சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டிக்கு இழப்புகள் ஏற்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றது ஆணையம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!