எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மோசமாகியுள்ள எண்ணெய் சாரா ஏற்றுமதி விகிதம்

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் தொடர்ந்து எட்டாவது மாதமாக மந்தமாகவே உள்ளன. வர்த்தகக் கவனிப்பாளர்கள் எதிர்பார்த்ததைவிட இது மோசமானதாக உள்ளது.  ஏற்றுமதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 12.3 விழுக்காடு குறைந்தது. இது செப்டம்பர் மாதத்தில் 8.1 விழுக்காடு குறைந்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்காலிக வர்த்தக உடன்பாடு ஒன்றை அமைப்பது குறித்த பேச்சுகள் நிலவியபோதும்  வர்த்தகப் போரால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகள் தணிந்தபாடில்லை.

அக்டோபர் மாதத்தின் இறக்கம், கடந்தாண்டு முன்னுரைக்கப்பட்ட 10 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம் என்று புளூம்பர்க் கருத்துக்கணிப்பு காட்டுகிறது. ஜூன் மாதத்தின் 17.4 விழுக்காடு குறைவைக் காட்டிலும் அக்டோபர் மாதத்தின் இறக்கம் அதிகமாகவே உள்ளது.

இவ்வாண்டு அக்டோபரின் ஏற்றுமதி, கடந்தாண்டின் அதே மாதத்தைக் காட்டிலும் 11 விழுக்காடு குறைந்துள்ளது.  மருந்து தயாரிப்பு, எரிபொருள் ரசாயனம், கரிம ரசாயனம் (primary chemicals) ஆகிய துறைகள் ஏற்றுமதிகளுக்கு ஆக அதிகமாகப் பங்காற்றுகின்றன.

மின்னணுவியல் ஏற்றுமதிகள் தொடர்ந்து பெருமளவில் சரிந்துள்ளன. அக்டோபரில் அந்த ஏற்றுமதிகளின் எண்ணிக்கை 16.4 விழுக்காடு குறைந்தது. . ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் (integrated circuits), மேசைக்கணினிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகியவை இந்தச் சரிவுக்கு அதிகம் பங்களித்தன.