அமைச்சர் லாரன்ஸ் வோங்: புதிய சூழலுக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்

சிங்கப்பூரில் பொருளியல் நடவடிக்கைகளைக் கட்டங்கட்டமாக தொடரும் அணுகுமுறை மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உதவும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஆனால், கொரோனா கிருமித்தொற்றை எதிர்க்கொள்ளவதற்கான கட்டுப்பாடுகளுடன் வாழும் புதிய சூழலுக்கு சிங்க்கப்பூரர்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொரோனா கிருமித் தொற்றை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள்நிலை பணிக்குழுவிற்குத் தலைமைத் தாங்குபவர்களில் ஒருவரான திரு வோங், 'மனி எஃபெம் 89.3' வானொலி நிலையத்திற்கு நேற்று அளித்த பேட்டியின்போது இதனைத் தெரிவித்தார்.

பொருளியல் நடவடிக்கைகளைத் தொடர்வது என்பது "மிகவும் நாசூக்கான" ஒன்று என்று அவர் வர்ணித்தார்.

இதற்கு தென் கொரியாவில் கிருமித் தொற்று நிலவரத்தை அவர் எடுத்துக்காட்டாக கூறினார்.

அந்நாட்டில் கிருமித் தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது கிருமித் தொற்று அலை எழுந்துள்ளது. 

"பொருளியல் நடவடிக்கைகளைத் தொடர்வதால் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பும் அதிகரிக்கும். இதன்மூலம் கிருமி பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும்.

"எனவேதான் ஒரே நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் தொடராமல் அவற்றைக் கட்டங்கதமாக தொடங்கும் அணுகுமுறையை செயல்படுத்த நாங்கள் முடிவெடுத்தோம்," என்று திரு வோங் விவரித்தார்.