2019: சிங்கப்பூரில் பதிவான திருமணங்கள் குறைவு, மணமுறிவுகள் அதிகம்

சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டு பதிவான திருமணங்களின் எண்ணிக்கை 25,434. கடந்த 9 ஆண்டுகளில் இது ஆகக் குறைவான அளவு.

கடந்த 2018ஆம் ஆண்டில் பதிவான 27,007 உடன் ஒப்பிடுகையில் இது 5.8% குறைவு. 24,363 திருமணங்கள் பதிவான 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இது ஆக குறைவான எண்ணிக்கை.

கடந்த 5 ஆண்டுகளில் பதிவான ஆண்டு சராசரி திருமண எண்ணிக்கை 27,389. அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் அதாவது 2010 முதல் 2014 வரையில் பதிவான ஆண்டு சராசரி திருமண எண்ணிக்கையான 26,844ஐவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மற்றும் இஸ்லாமிய திருமணங்கள் குறைந்திருந்தபோதும் இனங்களுக்கிடையிலான திருமணங்களின் விகிதம் கடந்த ஆண்டில் 22.9 எனப் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அந்த விகிதம் 22.4.

இருப்பினும், கடந்த ஆண்டில் மணவிலக்கு மற்றும் மணமுறிவு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத்துறை இன்று (ஜூலை 28) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. 

கடந்த ஆண்டில் 7,623 திருமணங்கள் மணவிலக்கு அல்லது மணமுறிவில் முடிந்தன. அதற்கு முந்தைய ஆண்டுகளில் முறிந்த 7,344 திருமணங்களைவிட இது 3.8% அதிகம்.

முஸ்லிம் அல்லாதவர்களிடையே மணமுறிவு விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் அத்தகைய 5,633 மணமுறிவுகள் நிகழ்ந்தன. அதற்கு முந்தைய ஆண்டு அந்த எண்ணிக்கை 5,308.

கடந்த 5 ஆண்டுகளில் பதிவான ஆண்டு சராசரி மணமுறிவு எண்ணிக்கை 7,536. அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் அதாவது 2010 முதல் 2014 வரையில் பதிவான ஆண்டு சராசரி திருமண எண்ணிக்கையான  7,402ஐவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண மற்றும் மணமுறிவு பெறுவோரின் சராசரி வயது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

கடந்த ஆண்டில் மணமுறிவு பெற்றவர்கள் மண வாழ்வில் சேர்ந்திருந்த சராசரி காலம் 10.4 ஆண்டுகள். 2009 ஆம் ஆண்டில் இந்த அளவு 10.1 ஆண்டாக இருந்தது.

ஐந்து முதல் 9 ஆண்டுகள்வரை சேர்ந்து வாழ்ந்து பின்னர் மண முறிவு பெற்றவர்களின் விகிதம் கடந்த ஆண்டில் 29%.