கர்ப்பிணி மனைவியையும் 4 வயது மகளையும் கொன்ற சொத்து முகவருக்கு மரண தண்டனை

கர்ப்பிணி மனைவியையும் 4 வயது மகளையும் கொன்ற சொத்து முகவருக்கு மரண தண்டனை

2 mins read
5bfaaf31-f6b0-48cd-8d8d-90f364f172d7
ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த 39 வயதான திருவாட்டி சூங் பெய் ஷானையும் அவர்களது மகள் ஸி நிங்கையும் அவர்களது உட்லண்ட்ஸ் வீட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி கழுத்தை நெரித்துக் கொன்றார் 45 வயதான டியோ கிம் ஹெங். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கர்ப்பிணியாக இருந்த மனைவியையும் நான்கு வயது மகளையும் கொலை செய்ததற்காக முன்னாள் சொத்து முகவர் ஒருவருக்கு சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 12) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கியபோது உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் ரமேஷ், "இது ஒரு துயரம் நிறைந்த வழக்கு," என்றார்.

ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த 39 வயதான திருவாட்டி சூங் பெய் ஷானையும் அவர்களது மகள் ஸி நிங்கையும் அவர்களது உட்லண்ட்ஸ் வீட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி கழுத்தை நெரித்துக் கொன்றார் 45 வயதான டியோ கிம் ஹெங்.

அவர்களது சடலங்களுடன் ஒரு வாரம் வரை அந்த வீட்டில் இருந்த டியோ, பின்னர் அந்தச் சடலங்களுக்கு தீ மூட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கியது.

டியோவுக்கு மன அழுத்தம் இருந்ததாலும் தங்கள் மகளின் முன்னிலையில் தம்மை மனைவி சிறுமைப்படுத்தியதாலும் கோபமடைந்து கொலைகளைச் செய்ததாக டியோவின் வழக்கறிஞர் வாதாடியதை நிராகரித்த நீதிபதி ரமேஷ், டியோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

கொலைச் சம்பவத்துக்கு முன்னும் பின்னும் பாலியல் தொடர்பான இணையத் தளங்களை டியோ பார்த்ததைக் குறிப்பிட்டு, தமக்கு பாலியல் உறவில் ஈடுபாடு இல்லை என்று பொய் கூறியதை நீதிபதி சுட்டிக் காட்டினார்.

கொலை செய்த பிறகு, தம் மனைவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது புகைப்படத்தை மாற்றி, திருவாட்டி சூங் உயிருடன் இருப்பது போன்ற மாயையை உருவாக்கிய டியோவின் சமயோசித மனநிலையையும் நீதிபதி குறிப்பிட்டார்.

கணவன் - மனைவிக்கிடையே நடந்த பிரச்சினையில் எந்த சம்பந்தமும் இல்லாத மகளையும் டியோ கொலை செய்ததும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

திருவாட்டி சூங்கின் வயிற்றில் இருந்த, பிறக்காத குழந்தையைக் கொன்றதாக டியோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்டது.

2009ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட டியோ, சூங் ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

சொத்துச் சந்தை முகவரான டியோவின் வருமானம் குறைந்ததையடுத்து, கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டது. 2017ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி காலையில் வாய்த்தகராறு முற்றி, துண்டால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார் டியோ.

பள்ளிக்கட்டணத்தைச் செலுத்தாததால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருந்த மகளையும் அதேபோல கொன்ற டியோ, தன்னுடைய உயிரையும் மாய்த்துக்கொள்ள ஒரு வாரகாலமாக முயற்சி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தாம் மிகவும் நேசித்த தம் மகள், பெற்றோர் இல்லாமல் வாழக்கூடாது என எண்ணி மகளைக் கொன்றதாக நீதிமன்றத்தில் டியோ குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
கர்ப்பிணிகொலைமரண தண்டனை