சிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது

சிங்கப்பூரில் இதுவரை 60,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு இன்று (ஜனவரி 22) தெரிவித்தது.

தயாரிக்கப்படும் இடத்திலிருந்து தடுப்பூசிகள் விநியோகம் தாமதமாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் நிலைமையை சிங்கப்பூர் அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நீண்டகால குடியிருப்பாளர்களுக்கும் போடுவதற்குத் தேவையான அளவுக்குத் தடுப்பூசிகள் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

நேற்று முன்தினம் சுமார் 10,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

உயர் தரத்தையும் பாதுகாப்பையும் தொடர்ந்து கட்டிக்காப்பதுடன் தடுப்பூசி போடும் திறனும் அதனை செயல்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இன்று நடைபெற்ற கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியானது.

தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் 39 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

அடுத்த 2 வாரங்களில் கொவிட்-19க்கு காரணமான கிருமிப் பரவலுக்கு எதிரான அதிகபட்ச எதிர்ப்பாற்றல் அவர்களிடம் உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஃபைசர் தடுப்பூசியின் இரு டோஸ்களுக்கும் இடையில் 21 நாட்கள் இடைவெளி விடப்படுகிறது. மோடர்னா, சினோவேக் உட்பட கொவிட்-19 தடுப்பூசிகள் அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூருக்கு அதிக அளவில் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபைசர் தயாரிப்பு நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்தத் தடுப்பு மருந்தின் விநியோகம் தாமதமானாலும் அதனால், சிங்கப்பூரின் தடுப்பூசி போடும் பணிகளில் தொய்வு இருக்காது என அமைச்சர் கான் குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாதத்துக்குள் மொத்தம் 8 தடுப்பூசி போடும் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டது. ஏற்கெனவே சாங்கி விமான நிலைய முனையம் 4, ராபிள்ஸ் சிட்டி கன்வென்ஷன் நிலையம், ஹோங் கா உயர்நிலைப் பள்ளி, உட்லண்ட்ஸ் கேலக்சி சமூக மன்றம் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon