தனிநபர் தொடர்பு தடமறிதல் தரவுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.
மூன்று வாசிப்புகளுக்கு விடப்பட்ட மசோதா தொடர்பாக மன்றத்தில் காரசார விவாதம் இடம் பெற்றது. ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினருமாக 18 உறுப்பினர்கள் அந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
திருத்த மசோதா மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் சட்டத்தில் திருத்தப்படும் அம்சங்கள் இம்மாதம் நடுப்பகுதிவாக்கில் நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த மசோதாவை அரசாங்கம் அவசரமாக அறிமுகம் செய்வதன் நோக்கம் சிங்கப்பூரர்களின் சந்தேகத்தைப் போக்குவதே என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார்.
மசோதா குறித்து விளக்கிய அவர், தரவுகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பொருத்தமான காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார்.
கொவிட்-19 தொடர்பு தடமறிதலுக்கும் ஏழு வகையான கடும் குற்றங்கள் தொடர்பான புலன்விசாரணக்கும் பயன்படுத்தும் வகையில் அத்தகைய தரவுகளைக் கட்டுப்படுத்தும் மசோதா மீது நேற்று மன்றத்தில் விவாதம் தொடங்கியது.
பொதுமக்களைப் பாதுகாப்பதோடு பாதுகாப்பைப் பராமரிக்கும் நோக்கம் கொண்டது கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கை) திருத்த மசோதா என்று டாக்டர் விவியன் அப்போது விளக்கினார்.
பொதுமக்களின் டிரேஸ்டுகெதர் தரவுகளைப் பாதுகாப்பது, கடுமையான குற்றங்களுக்குத் தீர்வு காண அதிலுள்ள தகவல்
களைப் பயன்படுத்த போலிசுக்கு அனுமதி அளிப்பது ஆகிய இரண்டுக்கும் இடையிலான சமநிலையை அந்த மசோதா கோரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அறிவார்ந்த தேசத் திட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு விவியன், இந்த மசோதாவை சட்ட அமைச்சர் கா. சண்முகம் சார்பாக திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அவசர மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அதிபரால் கையொப்பமிடப்பட்ட அவசரத்தன்மை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மன்றத்தில் வெவ்வேறு அமர்வுகளில் வாசிப்புகளை நிகழ்த்துவதற்குப் பதிலாக ஒரே அமர்வில் மூன்று வாசிப்புகளை நிகழ்த்த இது அனுமதிக்கும்.
அசாதாரணமான வேளை இது என்றும் தவிர்க்கமுடியாத சூழல் இது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், “கொள்ளைநோயை எதிர்த்து நாம் நடத்தி வரும் போராட்டத்தின் மீது நாம் நமது கவனத்தைத் தொடரும் நோக்கத்திலேயே மசோதா அவசரமாக அறிமுகம் செய்யப்படுகிறது,” என விளக்கினார்.
குற்றவியல் தண்டனைத் தொகுப்புகளில் இருந்து டிரேஸ்டுகெதர் தரவுகள் விதிவிலக்குப் பெறாது என்று அறிவிக்கத் தவறியதை அரசாங்கம் ஒப்புக்கொண்டிருப்பதாக டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
“இந்தத் தவற்றுக்கு நான் முழுப்பொறுப்பு ஏற்கிறேன். எனது தவற்றால் ஏற்பட்ட கலக்கத்துக்கும் பதற்றத்துக்கும் நான் மிகவும் வருந்துகிறேன்,” என்று அவர் மன்றத்தில் தெரிவித்தார்.
“கிருமிப் பரவல் என்பது வளரும் மிரட்டல். சில காலத்துக்கு இது நீடிக்கும். எனவே இது ஒரு முக்கியமான காலகட்டம். கொவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்திலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட முடியாது. நாம் ஒன்றிணைந்து அணிவகுக்க வேண்டியது அவசியம்.
“பொது சுகாதாரம், பாதுகாப்பு என்று ஒவ்வொன்றின் மீதும் கவனம் செலுத்தும் அதேவேளை நமது பொருளியலை கவனமாக மீண்டும் திறக்க வேண்டிய அவசியமும் உள்ளது,” என்று டாக்டர் விவியன் மேலும் குறிப்பிட்டார்.
தரவுகளை போலிஸ் பயன்படுத்தும் தருணம்: உதாரணத்துடன் விளக்கம்சட்டமாக உருவெடுக்கும் திருத்த மசோதா, ஏழு வகையான கடும் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே டிரேஸ்டுகெதர் தரவுகளை போலிஸ் பயன்படுத்தும் என தெளிவுபடுத்துகிறது.
துப்பாக்கி மற்றும் ஆபத்தான ஆயுதங்களின் பயன்பாடு, பயங்கரவாதம், கொலை, மரண தண்டனைக்குரிய போதைப்பொருள் குற்றங்கள், கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்றவை பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் உடனடி அச்சுறுத்தலாக விளங்கக்கூடியவை என்பதால் கடுமையான குற்றங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
டிரேஸ்டுகெதர் தரவுகளை போலிஸ் பயன்படுத்த வேண்டிய சூழல் குறித்து அவர் உதாரணத்துடன் விளக்கினார்.
“ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அப்போது அந்தக் குழந்தையிடமிருந்த கைபேசி அல்லது டிரேஸ்டுகெதர் கருவி கிடைக்கிறது. குழந்தையின் தாய் அதனை எடுத்துக்கொண்டு போலிசிடம் செல்கிறார். இதை வைத்து எதுவும் செய்யமுடியாது என்று அப்போது போலிஸ் கூறுவது பொருத்தமாக இருக்குமா,” என்று மன்ற உறுப்பினர்களைப் பார்த்து அவர் வினவினார். தரவு
களை சோதிக்க மாட்டோம் என அப்போது போலிஸ் கூறுவது ஏற்கத்தக்கதாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, டிரேஸ்டு கெதர் கருவியிலுள்ள தங்க ளது தொடர்பு தடமறிதல் தரவுகளை அரசாங்கக் கணினிகளிலிருந்து நீக்கு மாறு கடந்த மாதம் 350 பேர் கோரிக்கை விடுத்ததாக திரு விவியன் கூறினார்.
குறிப்பிட்ட சில குற்ற விசாரணைகளுக்கு அந்தத் தரவுகளை போலிஸ் பயன் படுத்தலாம் என வெளியான தகவலைத் தொடர்ந்து அக்கறைகள் எழுந்ததாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
அதே காலகட்டத்தில் டிரேஸ்டுகெதர் என்னும் தொடர்புகளின் தடமறிதல் தேசிய திட்டத்தின் ஒரு பகுதி யாக 390,000க்கும் மேற்பட்ட மக்கள் இணைந்து இருப்ப தாக அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 80 விழுக் காட்டினர் டிரேஸ்டுகெதர் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது அதற்கான கருவியைப் பெற்று உள்ளனர் என்றும் திரு விவியன் சொன்னார்.