சாஃப்ரா ஈசூனில் பள்ளி முகாம் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏசிஎஸ்(ஐ) பள்ளி மாணவர் உயிரிழப்பு

சாஃப்ரா ஈசூனில் உயரமான அமைப்பில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஆங்கிலோ - சீனப் பள்ளி (தற்சார்பு) மாணவரான அவர், நேற்று கீழே விழுந்ததும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்று காலை அவர் உயிரிழந்தார்.

‘கேம்லட்’ எனும் வெளிப்புற சாகசப் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்த பள்ளி நடவடிக்கையில் சுமார் 15 வயதான அந்த மாணவர் ஈடுபட்டிருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

மாணவர்களின் நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில், பள்ளி முகாம்களில் இத்தகைய உயரமான பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொளப்படுகின்றன.

தலைக்கவசம், பாதுகாப்பு உடை, கயிறு போன்ற பாதுகாப்பு அம்சங்களை அணிந்தவாறு உயரத்தில் இருக்கும் தடைகளைத் தாண்டக்கூடிய பயிற்சியில் பங்கேற்பாளர்கள் ஈடுபடுவர்.

சம்பவம் தொடர்பில் முகாமின் பயிற்றுவிப்பாளர்களிடம் போலிசார் விசாரண நடத்தினர். ஆனால், சந்தேகப்படும்படி சூது ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பயிற்றுவிப்பாளர்களிடம் நிபுணத்துவமும் தகுதியும் இருப்பது அவசியம் என்று வெளிப்புறக் கற்றல் சமூகத்தினருக்கு இச்சம்பவம் கடும் நினைவுறுத்தலாக அமைந்துள்ளது.

இது, அவர்கள் முழுநேரப் பயிற்றுவிப்பாளர்களாகவோ பகுதிநேரப் பயிற்றுவிப்பாளர்களாகவோ இருந்தாலும் பொருந்தும் என்றார் வெளிப்புறக் கற்றல், சாகசப் பயிற்சிக் கல்விச் சங்கத்தின் கௌரவச் செயலாளர் டிலேன் லிம்.

முகாம்கள், வளமூட்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதியான இச்சங்கத்தில் ‘கேம்லட்’ நிறுவனமும் ஓர் உறுப்பினராகும்.

இறந்துபோன சிறுவனின் குடும்பத்திற்கு ஃபேஸ்புக் பக்கத்தில் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்ட திரு லிம், அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ளவிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

“இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதால் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து நாம் ஊகம் ஏதும் செய்ய வேண்டாம். உண்மை அடிப்படையில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளட்டும்,” என்றார் அவர்.

அத்துடன் வெளிப்புறச் சமூகத்தினரைக் குறிப்பிடத்தக்க அளவில் இச்சம்பவம் பாதிப்பது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்தார்.

வெவ்வேறு முகாம் தளங்களின் செயல்முறைகளை மதிப்பிட்டு, மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்றும் வேலைக்கு ஆள் சேர்ப்பது, தேர்ந்தெடுப்பது, பயிற்சி வழங்குவது போன்ற அம்சங்களில் கவனம் தேவைப்படுகிறது என்றும் அவர் விவரித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!