மர்மக் கதைகளின் மாய முடிச்சுகள்

சி.சரவணகார்த்திகேயன்

‘திரில்’ என்ற ஆங்கிலச் சொல் லுக்கு மருத்துவத் துறையில் ஓர் அர்த்தமுண்டு. 

நெஞ்சில் ‘ஸ்டெத்தஸ்கோப்’ வைத்தால் கேட்கும் இருதயத்தின் வித்தியாசமான அதிர்வை அது குறிக்கும். இலக்கியத்திலும் கிட்டத்தட்ட அதை ஒட்டிய பொருள்தான். நன்கு வனையப்பட்ட திரில்லரொன்றை வாசிக்கையில் இதயம் தடதடக்கத்தான் செய்யும்!

முத்தமும் ‘திரில்’தான், யுத்தமும் ‘திரில்’தான். இரண்டிலும் ஆர்வமும் பதற்றமும் தொற்றிக் கொள்ளும். கவனித்தால் இரண்டி லுமே ஆதார போதை “அடுத்து என்ன நடக்குமோ?” என்ற நிச்சயமின்மை. 

அந்தப் புகைமூட்டம் வாசகனுள் கிளர்த்தும் ஊகங்கள் படைப்பாளி யின் முடிச்ச விழ்ப்புகளுடன் மோதும் சுவாரஸ்யம். 

அது புத்திக்கான சவால் என்ற விளையாட்டாகிறது. அதனால் வாசகன் உற்சாகமாகப் பங்கேற் கிறான். இந்த உளவியலால்தான் வேறெந்த வகைமையைவிடவும் திரில்லர் எனப்படும் மர்மப் புனைவு கள் உலகம் முழுவதும் பரவலாக வாசிக்கப்படுகின்றன.

திரில்லர்கள் எழுத்தில் மட்டு மின்றி திரைப்படங்களிலும் கோலோச்சுகின்றன. ‘எட்ஜ் ஆஃப் த சீட்’ என்பார்கள். திரையரங்கு களில் அப்படி இருக்கையின் நுனியில் அமர்ந்து, நகம் கடித்தபடி, உள்ளங்கை சில்லிட்டு நாம் ரசிக்கும் த்ரில்லர் படங்கள் உண்டு. 

வேறெந்த வகைமைக்காவது நம் ஐம்புலன்களும் இப்படி ஒருங் கிணையுமா? (பாலியல் படங்கள் விதிவிலக்கு. அது இயற்கையின் நியதி.) நம் உடற்பாகங்கள்கூட அப்படி கதைக்கேற்ப இயல்பாவதன் பொருள் நாம் அதனுடன் எப்படி ஒன்றிப் போகிறோம் என்பதற்கான உதாரணம்.

பால்யத்தில் காமிக்ஸையும் பதின்மத்தில் மில்ஸ் அண்ட் பூனையும் கடந்த பின் இளமையில் நுழையும் ஒரு வாசகனை திரில்லர் கதைகளே வரவேற்கும். அதற்கு அவன் கை நீட்டினால் அப்புறம் நெடுங்காலத்துக்கு அதுவே அவனை விடாமல் அணைத்துக் கொள்ளும். 

அந்தக் காலகட்டத்தில் அறி முகமாகும் எழுத்தாளர்களே அவனை வாழ்நாள் முழுமைக்கும் ஆதர்ச படைப்பாளிகளாக்கும் வாய்ப்பு அதிகம். அதனால்தான் அகதா கிறிஸ்டியும் சிட்னி ஷெல்டனும் ஜெர்ஃப்ரி ஆர்ச்சரும் டான் பிரௌனும் இயன் ஃப்ளெமிங்கும் பல கோடி வாசகர் களால் கொண்டாடப்படுகிறார்கள்.

மர்மப் புனைவுகளுக்கு எல்லைக்கோடு ஏதும் கிடையாது. 

திரில்லர் என்றதும் குற்றப் புலனாய்வுக் கதைகள்தான் பிரதா னமாக நம் நினைவுக்கு வரும் என்றாலும் பேய்க் கதை, விஞ்ஞானக் கதை, உளவாளிக் கதை எனப் பலவும் குறுக்கு வெட்டாய் இந்த வகைமையைத் தொட்டுச் செல்லும். 

சொல்லப் போனால் காதல் கதைகளில்கூட திரில்லர் சுவையை நுழைக்க முடியும். 

‘96’ தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாதி ஒரு சிறந்த திரில்லர் அனுபவத்தைத் தந்தது தானே! ராமும் ஜானுவும் சேர்வார்களா என்ற கேள்வி பார்வையாளர் ஒவ்வொருவருக் குள்ளும் பதற்றத்தை ஏற்படுத் தியது தானே! 

ஆக, எந்தக் கதையில் எல்லாம் அடுத்து என்ன ஆகும் என்கிற பதற்றம் எழுப்பப்படுகிறதோ அவற் றுக்கு எல்லாம் மர்மக் கதையின் சாயலேறி விடுகிறது.

தமிழில் மர்மக் கதைகள் ஏராளம் எழுதப்பட்டுவிட்டன. பெரும்பாலும் ‘பல்ப் ஃபிக்ஷன்’ எனப்படும் மேலோட்டமான மாத நாவல் வகை எழுத்துகள்தான் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும் தரமான திரில்லர்களும் இங்கு எழுதப்பட்டிருக்கின்றன. 

வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதைநாயகி தொடங்கி இன்று அம்பை, அபிலாஷ் வரை தமிழ் மர்மக் கதைகளுக்கு ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு. 

சுஜாதா அதன் பிதாமகன் எனலாம். நவீன இலக்கியம் எழுது பவர்கள் திரில்லர் வகைமையை ஒரு தீட்டுப் பொருள் போல் தள்ளி வைத்தாலும் ஜெயமோகன் உள்ளிட்ட பேரிலக்கிய ஆளுமை களும் திரில்லர் வகையை அவ்வப் போது எழுதி முயற்சி செய்திருக் கிறார்கள்.

கவிதை எழுத வருபவனுக்கு காதல் துணையாவதுபோல் கதை எழுத வருபவனுக்கு திரில்லர் கை கொடுக்கும். 

நாம் எழுதுவதை நாமே ரசிக்க முடிந்தால்தான் மேலும் எழுதவும் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் உந்துதல் கிடைக்கும். 

அந்த வகையில் ஓர் ஆரம்ப நிலை எழுத்தாளன் மர்மக் கதை யிலிருந்து தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கலாம்.

ஒரு துளி குருதியிலிருந்து ஒரு சாகசத்தைத் தொடங்குவது எத்தனை ரம்மியமானது!

2019-06-16 06:10:00 +0800