மகாதீருக்கான ஆதரவை மறு உறுதி செய்யும் அன்வாரின் கட்சி

மலேசியாவின் ‘கெஅடிலான் ராக்யாட்’ கட்சி அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மதிற்குத் தனது ஆதரவை மறுபடியும் உறுதிசெய்துள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்துகொண்டே அதன் தலைவரான டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை நடத்த அக்கட்சியினர் திட்டமிடுவதாக வதந்திகள் அண்மையில் பரவத் தொடங்கிய நிலையில் அந்தக் கட்சி இவ்வாறு கூறியுள்ளது.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் மலேசியாவின் முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ‘கெஅடிலான் ராக்யாட்’ கட்சி, டாக்டர் மகாதீரின் ‘பிரிபூமி பெர்சாத்து’ கட்சி, பார்ட்டி அமானா நெகாரா ஆகியவை இடம்பெறுகின்றன.

டாக்டர் மகாதீர் முகம்மதின் தலைமைத்துவத்தை ‘கெஅடிலான் ராக்யாட்’ கட்சி முழுமையாக ஆதரிப்பதாக பக்கத்தான் ஹரப்பானின் மத்திய தலைமைத்துவ மன்றம் தெரிவித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் மகாதீருக்கு அடுத்து திரு அன்வார் பிரதமர் பதவியை ஏற்பார் என்று கூட்டணியின் அனைத்துத் தரப்புகளும் உடன்பட்டிருந்ததை கெஅடிலான் கட்சி நினைவுபடுத்தியது.

“பக்கத்தான் ஹரப்பானில் ஒற்றுமையும் பங்காளித்துவமும் கட்டிக்காக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தலைமைத்துவத்தைச் சீண்டும் முறையிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கலகத்தை ஏற்படுத்தும் விதமாகவும் கிளப்பப்படும் புரளிகளை நாங்கள் மறுக்கிறோம்,” என்று கெஅடிலான் கட்சி தெரிவித்தது.