சுடச் சுடச் செய்திகள்

ஜப்பான்: புயலுக்கு ஒருவர் பலி; நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்

ஜப்பானின் ஷிஸோக்கா மாநிலத்தில் நேற்றிரவு 7 மணியளவில் ‘ஹகிபிஸ்’ புயல் கரை கடந்ததை அடுத்து, அந்நாட்டின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மில்லியன்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

சிபா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் நேற்று மாலை 6.21 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இருந்தாலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு தலைநகர் தோக்கியோவிலும் உணரப்பட்டது. கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் மண் இறுக்கத்தன்மை குறைந்து, நெகிழ்ந்து போயிருக்கும் என்பதாலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதாலும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம், மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடும்படி மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

சரக்கு வாகனமொன்றைப் புயல் புரட்டிப் போட்டதில் 50களில் இருந்த அதன் உரிமையாளர் மாண்டுபோனார். டொமியோக்காவில்  ஏற்பட்ட நிலச்சரிவில் இரு வீடுகள் புதையுண்டன; குறைந்தது மூவரைக் காணவில்லை.

புயலில் சிக்கி குறைந்தது 36 பேர் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. 

சைத்தாமா, சிபா மாநிலங்களில் பல வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டன. கோச்சி மாநிலத்தில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கம் அடியோடு சாய்ந்தது.

கிரேட்டர் தோக்கியோ பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 57,000 வீடுகள் நேற்று மாலையில் இருந்து மின்சாரமின்றித் தவித்தன. அதுபோல சில பகுதிகளில் தொலைத்தொடர்புச் சேவையும் துண்டிக்கப்பட்டது. கனகாவா மாநிலத்தில் கடந்த இரு நாட்களில் மட்டும் 800 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது.

புயல், கனமழை காரணமாக 2,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன; ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது; பல விரைவுச் சாலைகள் மூடப்பட்டுள்ளன.