‘நிலைத்தன்மைக்கும் செழிப்புக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் வழிவகுக்கும்’

பெய்ஜிங்: ஹாங்காங்கின் நீடித்த கால நிலைத்தன்மைக்கும் செழிப்புக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் வழிவகுக்கும் என்று சீனப் பிரதமர் லி கெசியாங் நேற்று கூறியதுடன் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தின் இறுதி நாளான நேற்று மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. வாக்கெடுப்பில் 2,878 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஒருவர் மறுத்தும் அறுவர் வாக்களிப்பிலிருந்து விலகியும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து சீனாவின் மூத்த தலைமைக் குழு, ஹாங்காங் அரசாங்கத்துடனும் அடிப்படை சட்டக் குழுவுடனும் ஆலோசித்து புதிய சட்டத்தின் விவரங்களை உறுதிசெய்து வெளியிடும் என்று கூறப்படுகிறது.

இப்புதிய மசோதாவின் படி, சீனா அதன் சொந்த பாதுகாப்பு நிறுவனங்களை ஹாங்காங்கில் ‘தேவை எழும்போது’ நிறுவும் அதிகாரத்தைப் பெறலாம்.

சீனாவின் ஆளுமையில் உள்ள ஒரு தன்னாட்சி பிரதேசம், ஹாங்காங். வெளியுறவு மற்றும் ராணுவம் ஆகிய துறைகள் தொடர்பில் ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. மற்ற துறைகளை ஹாங்காங அரசாங்கமே நிர்வகித்து வருகிறது.

ஹாங்காங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகைசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, சென்ற ஆண்டு ஹாங்காங்கில் கட்டுக்கடங்காத அளவில் போராட்டம் வெடித்தது. ஹாங்காங் பொருளியலும் ஒரு முடக்கநிலைக்கு வந்தது.

இதையடுத்து கைதிகள் பரிமாற்றச் சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் மீட்டுக்கொண்டது. இதற்கிடையே இந்த அமைதியின்மைக்கு அந்நிய தலையீடே காரணம் என்பது சீனாவின் வாதம். ஹாங்காங்கிற்கான இப்புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தால், ஹாங்காங் அரசியல் விவகாரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹாங்காங்கின் பொருளியல் மேம்பாட்டை சீனாவின் மற்ற பகுதிகளுடன் ஒன்றிணைக்கவும் இது தோதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.