தோக்கியோவில் கிருமிப் பெருக்கத்திற்கு நடுவே பொருளியலை மீட்க ஜப்பான் தீவிரம்

தோக்கியோ: அன்றாட கிருமித்தொற்று சம்பவங்கள் தணியாத நிலையில் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கத் தயாராகி வருகிறது ஜப்பான்.

தலைநகர் தோக்கியோவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 243 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாயின. தளர்வு நடவடிக்கைகள் நடப்புக்கு வந்ததும் 5,000 பேர் வரை ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

விளையாட்டு நிகழ்ச்சிகளும் இசைக் கச்சேரிகளும் அவற்றுள் அடங்கும்.

மே மாத இறுதிவாக்கில் அவசர நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் வர்த்தக நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முழுமையாக மீண்டன.

அதன் தொடர் நடவடிக்கையாக பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக சில நாடுகளுடன் ஆலோசனை நடத்த ஜப்பான் நிர்வாகம் தயாராகி வருவதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

தொடக்க கட்ட கிருமிப் பரவல் தடுப்பு முயற்சிகளில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து, ஏற்கெனவே நிலைகுலைந்துவிட்ட பொருளியலை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் உலக நாடுகளின் வரிசையில் இப்போது ஜப்பானும் இணைந்து உள்ளது.

தோக்கியோவில் கிருமித்தொற்று சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையிலும் வர்த்தகங்களை மீண்டும் தொடங்கும் திட்டங்களில் மாற்றம் இல்லை என்று ஜப்பானிய அதிகாரிகள் திரும்பத் திரும்பத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பருவநிலை சாதகமாக இருப்பின் தேசிய ‘பேஸ்பால்’ விளையாட்டின் ஆறு போட்டிகளை நேற்று மாலை பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆயினும் தோக்கியோவில் எவ்வித ஆட்டத்திற்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதிக காற்பந்தாட்டங்களையும் நேற்று தொடங்க ஜப்பான் திட்டமிட்டு இருந்தது.

தளர்வு நடவடிக்கைகள் ஒருபக்கம் தொடரும் நிலையில் தோக்கியோவில் நேற்று 243 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது. வியாழக்கிழமை 224 சம்பவங்கள் பதிவானதும் அதற்கு முந்திய உச்சமாகக் கருதப்பட்டது. மேலும், அவசரநிலை நடப்பில் இருந்த காலத்தில் பதிவானதைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை அதிகம்.

ஜப்பானில் கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா நேற்றுக் காலை செய்தியாளர்களிடம் பேசியபோது கிருமித்தொற்றை தடுப்பது, பொருளியலை நல்ல நிலைமையில் வைப்பது ஆகிய இரண்டையும் சம அளவில் தொடர்ந்து நடத்த வேண்டி உள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!