இங்கிலாந்து: ஜூலை 24 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்

முகக்கவசம் அணியத் தவறுவோருக்கு 100 பவுண்ட் அபராதம்

லண்டன்: கொவிட்-19 கிருமிப் பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதைத் தடுக்க இம்மாதம் 24ஆம் தேதி முதல் இங்கிலாந்து மக்கள் கடைகளுக்கும் பேரங்காடிகளுக்கும் செல்லும்போது முகக்கவசம் அணிந்திட வேண்டும்.

முகக்கவசம் அணிவது தொடர்பிலான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படலாம் என்று சென்ற வாரம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.

ஆனால் முகக்கவசம் அணிவது என்பது அவரவர் பொது அறிவுக்கு விட்டுவிடப்பட வேண்டிய ஒன்று என்று நாடாளுமன்றச் சபை செயலாளர் மைக்கல் கோவ், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.

இதையடுத்து முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உள்ளதாக நேற்று முன்தினம் பிரதமரின் அலுவலகம் அறிவித்தது.

முகக்கவசம் அணியத் தவறுவோருக்கு 100 பவுண்ட் (S$175) அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் பிரிட் டனின் கொரோனா கிருமித்தொற்று உயிரிழப்பு எண்ணிக்கையே ஆக அதிகமாக உள்ளது. இதுவரை அங்கு சுமார் 45,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.

உலகநாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த நிலையில் பிரிட்டன் உள்ளது.

120,000 பேர் உயிரிழக்கலாம்

பிரிட்டனில் வரும் குளிர்காலத்தில் இரண்டாவது கொரோனா கிருமி அலை தாக்கக்கூடும் என்றும் மருத்துவமனைகளில் பதி வாகும் உயிரிழப்பு 120,000ஐ எட்டக்கூடும் என்றும் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

பருவகால காய்ச்சல் சம்பவங் களுடனும் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகள், கொவிட்-19 நெருக்கடியுடனும் போராட வேண்டி இருக்கும் என்று கண்டறிந்துள்ளது ‘தி அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்’ ஆய்வறிக்கை.

இதன்படி இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திற்கும் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 120,000 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குப் பலியாகக் கூடும் என்று ஆய்வில் பங்கேற்ற 37 விஞ்ஞானிகள் முன்னுரைத்து உள்ளனர். இருப்பினும் கிருமிப் பரவலுக்கு எதிராக நடவடிக்கை உடனே எடுக்கப்பட்டால், இந்நிலை சாத்தியமாகும் அபாயம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.

பராமரிப்பு இல்லங்கள் அல்லது வேறு இடங்களில் நிகழக்கூடிய கிருமித்தொற்று உயிரிழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை. அத்துடன் புதிய கிருமித்தொற்று சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை ஏதும் எடுக்காத ஒரு சூழலில் இந்நிலை நேரலாம் என்று கூறப்படுகிறது.