இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’

கிராமத்து மக்கள் பெரிதும் போற்றும் இரு தலைவர்கள், அவர்களுக்கு இடையே பல காலமாக இருந்து வரும் சண்டை, சச்சரவு. மக்கள் வாழும் மீன்பிடி கிராமத்தில் ஒரு துறைமுகத்தைக் கட்டலாமா வேண்டாமா என்பதைப் பற்றிய வாக்குவாதம். இவ்வாறு நாடகம் வாயிலாக நாட்டின் இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இவ்வாண்டின் ‘சங்கே முழங்கு’ அமைந்தது. 

நாட்டின் வரலாற்றை சுவாரசியமாக மக்களுக்கு நினைவூட்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை மாணவர்கள் தங்களின் படைப்பை ஆகஸ்ட் மாதம் மேடையேற்றினர். இந்த நிகழ்ச்சியை மேடையேற்றும் முயற்சிகளில் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். சங்கே முழங்குக்கான தயாரிப்பு வேலைகள் சென்ற ஆண்டே துவங்கிவிட்டன.

“சங்கே முழங்கு போன்ற நிகழ்ச்சிகளின் வழி இளையர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தலாம்,” என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் த. சுதே‌ஷினி, 24, கூறினார். 

அத்துடன் நிகழ்ச்சியில் பங்கெடுத்த நடிகர்களில் பலர் முதல்முறையாக இப்படைப்பில் தங்கள் நடிப்பாற்றலைக் காட்டியிருந்ததாகவும் அவர் சொன்னார். 

“சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டது இந்தக் கதை. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை நாங்கள் அமைக்கவில்லை. 

“பார்ப்போரை 1970களில் இருந்த வாழ்க்கைச் சூழலுக்கே கொண்டு செல்லும் வகையில் படைப்பு சிறந்த கற்பனையுடன் உருவாக்கம் கண்டது. பார்வையாளர்களுக்குக் கடந்தகால நினைவுகளைக் கண்முன் நிழலாடச் செய்ய இந்த முயற்சியில் இறங்கினோம்,” என்று கூறினார் வசனக் குழுவில் இருக்கும் சி. ரவீணா, 21.

மேடை அலங்காரங்கள் மிக அழகாக செய்யப்பட்டதுடன் அவை படைப்புக்கு ஏற்ப மிக அற்புதமாகவும் காட்சியளித்தன. ஒவ்வொரு காட்சியும் முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதற்கு முன், மேடையமைப்பு விரைவாக மாற்றப்பட்டது. இதனால் படைப்பும் தங்குதடையின்றி மிகச் சிறப்பாக அரங்கேறியது.

“இவ்வாண்டின் நிகழ்ச்சி மிகவும் புதுமையான முறையில் இருந்தது. பெரும்பாலும் கதையே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இவ்வாண்டு, அனைவரும் எதிர்பார்க்கும் அதே பிரம்மாண்டத்துடன் ஓர் எளிமையான கதையை மேடையேற்றியிருக்கிறோம்,” என்று நிகழ்ச்சியின் துணை இயக்குநர் ரூபினிஸ்ரீ, 23, கூறினார்.

Property field_caption_text
படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை
Property field_caption_text
படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை