வெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு

உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது படிப்பில் சிரமப்பட்ட கண்ணன் பவிந்திரன், நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியில் சிறந்த தேர்ச்சி பெற்று வருகிறார். 

‘ஏரோநோட்டிக்கல் ஏரோஸ்பேஸ்’ தொழில்நுட்பப் பட்டயப் படிப்பில் இரண்டாம் ஆண்டை முடித்திருக்கும் பவிந்திரன், ஒவ்வொரு தவணையிலும் சிறந்த 15 விழுக்காடு மாணவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். 

உயர்நிலை மூன்றில் எடுத்த சரியான முடிவு, இந்த வெற்றிகளுக்கு வித்திட்டதாகக் கூறுகிறார் பவிந்திரன்.   இணைப்பாட நடவடிக்கையாக தேசிய குடிமைத் தற்காப்பு மாணவர் படையில் சேர்ந்திருந்த பவிந்திரன், அதில் அதிக கவனம் செலுத்தியதால் படிப்பில் போதிய அக்கறை செலுத்தவில்லை. அவரது உயர்நிலை மூன்று அரை யாண்டுத் தேர்வு முடிவு பற்றி அவரது தந்தையிடம் பேசிய ஆசிரியர்கள், இதுவே வழக்கநிலைத் தேர்வு முடிவாக இருந்திருந்தால் தொடக்கக் கல்லூரிக்கோ பலதுறைத் தொழிற்கல்லூரிக்கோ பவித்திரன் தகுதி பெறமாட்டார் என்றனர். 

அதன்பின்னர், பவிந்திரன், படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். புதிய உத்திகளையும் அவர் கைக்கொண்டார்.

“மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக நான் கற்றவற்றைப் புரிந்துகொள்ள முற்பட்டேன். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடனே தீர்த்துக் கொண்டேன். எனது நேரத்தையும் சரியாக வகுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்,” என்றார் அவர்.

தொடர்ச்சியான உழைப்பினால், அடுத்தடுத்த தேர்வுகளில் முன்னேற்றம் அடைந்தார். உயர்நிலை மூன்று அரையாண்டுத் தேர்வில் கணிதப் பாடத்தில் ‘டி’ பெற்ற அவர், கடின உழைப்பால் அதனை ‘பி’ ஆகவும் பின்னர் ‘ஏ’ ஆகவும் உயர்த்தினார்.

படிப்படியான அணுகுமுறை அவருக்கு சிறந்த பாதையை வகுத்து வந்தது. வழக்கநிலைக்கு முந்திய பள்ளித் தேர்வு முடிவுகள் அவருக்கு மேலும் தன்னம்பிக்கையை ஊட்டின.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் அடிப்படைப் பாடத்திட்டம் (Foundation Programme) வழியாக வழக்கநிலைத் தேர்வுக்குப் பின்னர் நேரடியாக கல்லூரியில் சேர்ந்தார். 

விமானத் துறையில் சேர்ந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்து இந்த முடிவை எடுத்ததாக பவிந்திரன் கூறினார்.

சாதாரணநிலைத் தேர்வை எழுதாமல்  நேரடியாக பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு பவிந்திரன் செல்வது குறித்து அவரது பெற்றோர் ஆரம்பத்தில் தயங்கினர். பின்னர், சில ஆசிரியர்களும் உயர்நிலைப்பள்ளியின் துணை முதல்வரும் ஊக்கம் கொடுத்ததால் அவர்கள் சம்மதித்தனர்.

தமது வெற்றிக்கு நேர நிர்வாகமே முக்கிய காரணம் என்ற இவர், இந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை எழுதும் மாணவர்களிடம் சொல்ல விரும்புது இதுதான்: “எந்தப் பணிக்கு எந்த நேரத்தில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் எனத் தெரிந்துகொள்ளவேண்டும். அத்துடன், ஒவ்வொரு நாளையும் சரியாகத் திட்டமிடவேண்டும். அந்தத் திட்டத்தை நீக்குப்போக்குடன் வகுத்து விவேகத்துடன் செயல்படுவது முக்கியம்.” 

பல்கலைக்கழகம் செல்வது இவரின் அடுத்த இலக்கு.