ஸ்டேசியின் ‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ சமூக ஊடகத் தளம்

சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியர்கள் எனப்படும் ‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ சமூக ஊடகத் தளம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் இந்திய இளையர்களை வேகமாக ஈர்க்கும் தளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சாதாரண மக்களின் கதைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள விரும்பிய ஸ்டேசி டான்யா ஷாமினி, 25, சுயமாகவே தமது தளத்தை இயக்கி வருகிறார்.

“எதிர்பாராத இடங்களில்தான் சுவாரசியமான வாழ்க்கைக் கதைகள் பொதிந்துள்ளன. ஏற்கெனவே சமுதாயத்தில் கௌரவம் பெற்றவர்களைப் பற்றிய கதைகள் இவை அல்ல,” என்று ஸ்டேசி தெரிவித்தார்.

மாறுபட்ட ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைக் கொண்டவர்கள், துன்பங்களைக் கடந்து வெற்றியடைந்தவர்கள், தீய வழியிலிருந்து விலகி மனம் திருந்தியவர்கள் போன்றோரின் உருக்கமான கதைகளைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுதி ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் ஸ்டேசி வெளியிடுகிறார்.

எஸ்ஐஎம் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்று தற்போது ஊடக நிறுவனம் ஒன்றுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்டேசி, சிறு வயது முதல் எழுத விரும்பியதாகக் கூறினார். செய்தித்துறையிலோ எழுத்துத்துறையிலோ எந்த முன் அனுபவம் இல்லாத அவர், இந்தத் தளத்தைக் கடந்தாண்டு அக்டோபரில் திடீரென ஆரம்பித்ததாகக் கூறினார்.

சமூக ஊடகப் பிரபலம் ட்ரூ பின்ஸ்கியின் ரசிகையான ஸ்டேசி, சாதாரண மக்களின் கதைகளை பின்ஸ்கியின் காணொளிகள் கவனத்தை ஈர்க்கும் முறையில் காட்டுவதைச் சுட்டினார்.

“சிங்கப்பூர் இந்தியர்களுக்கும் இதுபோன்ற சுவையான கதைகள் உள்ளன,” என்றார்.

சிங்கப்பூர் இந்தியர்களை மையப்படுத்தும் சில இணையப்பக்கங்கள் இருக்கும்போதும் இன்னொரு புதிய தளம் எதற்கு என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் “வெளிப்படையாகச் சொல்லப்போனால் உள்ளூர் தமிழர்களைப் பற்றிய சில சமூக ஊடகப் பக்கங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஊடகப் பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் மஞ்சள் பத்திரிகைகளைப் போல சில பக்கங்கள் செயல்படுகின்றன.

“வேறு சில பக்கங்களோ அழகாக இருப்பவர்கள், அதிக நண்பர்களைக் கொண்டவர்கள், பாட்டு அல்லது நடனத் திறன் உள்ளவர்கள் ஆகியோர் மீது கவனம் செலுத்துவதைக் காண்கிறேன்,” என்றார்.

“இத்தகைய தளங்களில் அன்புக்கும் பரிவுக்கும் தட்டுப்பாடு இருப்பது போல உணர்கிறேன். உண்மையைத் திரித்துக் கூறி பிறரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக ஊக்கமடையச் செய்யும் பதிவு களுக்குத் தேவை இருக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.

ஊடகங்கள் அதிகம் எழுதாத பலரின் கதைகளையும் வெளியிடும் சுதந்திரம் தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“ஒதுக்கப்படுவதால் பாதிக்கப்படும் திருநங்கைகள், மிக சாதாரணமான வேலைகளில் இருப்பவர்கள் உள்ளிட்டோரைப் பற்றிய கதைகளைச் செய்தி ஊடகங்களில் காண்பது அரிது. எனவே இவர்

களது கதைகளை சமூக ஊடகங்கள் சொல்ல வேண்டியுள்ளன,” என்றார் அவர்.

‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ தொடங்கிய ஐந்து மாதங்களிலேயே அதன் ஃபேஸ்புக் பக்கத்தை இதுவரை 6,254 பேரும் இன்ஸ்டகிராமில் 1,783 பேரும் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு மில்லியன் முறைக்கு மேல் இந்த ஃபேஸ்புக் பக்கம் பார்க்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் இந்தப் பக்கம் அசுர வளர்ச்சி பெற்றதற்கான காரணங்களை ஸ்டேசி விளக்கினார்.

“செய்தியாளராக இல்லாமல் பொதுமக்களில் ஒருவராக இதனைச் செய்யும்போது என்னிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்வோரின் தயக்கமும் சந்தேகமும் குறைகின்றன. என்னை நண்பராக நினைத்து அவர்கள் மனம் திறந்து பேசுகின்றனர்.

“அவர்கள் கூறுவதை வைத்தே ஒவ்வொரு பதிவையும் நான் தொடங்குவேன். இந்த பாணி தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகப் பலர் என்னிடம் கூறினர்,” என்றார் அவர்.

விழிப்புணர்வை அதிகரிப்பது, திறன்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைப்பது ஆகியவை இந்த முயற்சியின் குறிக்கோள் என்கிறார் ஸ்டேசி. தன்னைப் பிரபலப்படுத்த நினைப்போரையும் பொய் கூறுவோரையும் பற்றிய பதிவுகளை எழுதாமல் இருப்பதில் கவனமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“சிலர் தம்மைப் பற்றி எழுதுவதற்காக என்னிடம் பணம் கொடுத்தும் பார்த்தனர். அவர்களது இந்தக் கோரிக்கைகளை நான் ஏற்பதில்லை,” என ஸ்டேசி கூறினார்.

சமூக ஊடகம் என்பதால் தமது பதிவுகளைப் பற்றிய கருத்துகளும் உடனே பதிவாகி கலந்துரையாடல்களுக்கு வித்திடுவதாக அவர் கூறுகிறார்.

தாம் பேட்டி எடுத்த அனைவருடனும் தொடர்பில் வைத்திருப்பதாகக் கூறிய ஸ்டேசி, அவர்களைப் பற்றி தமது பக்கத்தில் செய்யப்படும் கருத்துப்பதிவுகளைக் கண்காணிப்பதாகக் கூறினார்.

“கருத்துச் சுதந்திரத்தை நான் ஆதரித்தாலும் தேவையில்லாத தீயச் சொற்களைக் கொண்டுள்ள பிறரது பதிவுகளை அகற்றிவிடுவேன். பிறரை வதைக்கும் அல்லது அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் பதிவுகளை உடனே நீக்கி விடுவேன்.” என்றார் அவர்.

“சிங்கப்பூர் இந்திய இளையர்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களைப் போலவே தமிழ் மொழியும் சக்திவாய்ந்தது” என்றார் ஸ்டேசி.

“தமிழுக்கு நிகரான தித்திப்பும் காரசாரமும் ஆங்கிலத்தில் இல்லை. நம் இளையர்கள் பலர் பெரும்பாலான நேரங்களில் ஆங்கிலத்தில் பேசினாலும் குறிப்பான சில சொற்களுக்காகத் தமிழைப் பயன்படுத்துகின்றனர். சிலர் தமிழைக் கத்தியைப் போல பயன்படுத்தி மற்றவர்களைக் காயப்படுத்துவது வருத்தத்திற்கு உரியதே,”என்றார் அவர்.

இந்தத் தளத்தை வரவேற்போரும் விமர்சிப்போரும் உள்ளனர். “நம்மில் பலர் மறந்துள்ள பாதைகளும் கனவுகளும் இந்தப் பக்கம் நினைவுபடுத்துகிறது. சிங்கப்பூரர்களின் பன்முகத்தன்மையை இப்பக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது,” என்று ஃபேஸ்புக் பயனீட்டாளர் 29 வயது ராமன் தெரிவித்தார்.

“பலருக்குத் தெரியாத சிலருடைய தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கைக் கதைகளை விளக்கும் இந்தப் பக்கம் வரவேற்கத்தக்கது,” என்றார் 31 வயது நிதி நிபுணர் கௌதமன் ஹரிதாஸ்.

“சிங்கப்பூர் இந்தியர்கள் தங்களது வெற்றியின் ரகசியங்கள் இப்படிப்பட்ட தளங்களில் பகிர்வதன் மூலம் நம் சமூகம் மேன்மை அடைகிறது,” என்று சுயதொழில் செய்யும் 48 வயது கலையரசு கூறினார்.

ஆனால், 27 வயது தேவி போன்ற சிலருக்கு இந்தப் பக்கம் அவ்வளவாக பிடிக்கவில்லை. “இந்தத் தளத்தில் பேட்டி எடுக்கப்பட்டோரில் சிலர் மிகச் சாதாரணமானவர்களே. பெருமையாகக் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் சாதித்துள்ளதாக நான் கருதவில்லை” என்றார் தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் தேவி.

மற்றவர்களின் சர்ச்சைக்குரிய அம்சங்களைத் தமது தளத்தில் பிரபலப்படுத்தி பெயர் வாங்க முயல்வதாகச் சந்தேகக் கண்ணுடன் சிலர் தம்மைப் பார்ப்பதாகக் கூறிய ஸ்டேசி, இதனால் தனிப்பட்ட முறையிலும் அவர்களால் தாக்கப்படுவதாகக் கூறுகிறார்.

“நான் இதை விளையாட்டுக்காகச் செய்யவில்லை. தவறான முறையில் என் தளம் பிரபலமாவதை நான் விரும்பவில்லை. இந்தத் தளத்தால் பிறருக்கு நன்மை ஏற்படவேண்டும் என்பதே எனது இலக்கு,” என்றார் ஸ்டேசி.

எந்தச் சம்பளமுமின்றி ஆர்வத்தால் மட்டுமே தமது தளத்தை வளர்த்து அதன் தரத்தைக் கட்டிக்காப்பது சவாலாக இருப்பதாக ஸ்டேசி தெரிவித்தார்.

சவாலான நேரங்களில் தம் குடும்பத்தினரும் நண்பர்களும் உறுதுணையாக இருந்ததாக அவர் கூறினார். ‘இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்’ தளத்தைத் தொடர்ந்து நீடிக்கக்கூடிய நிலைக்கு உயர்த்த விரும்புகிறார் ஸ்டேசி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!