லாரன்ஸ்: நீண்டகால நோக்கு வேண்டும்

பிரதான நில மேம்பாட்டாளர்கள் பெரிய நிலப்பகுதிகளில் பணி மேற்கொள்வதால், அவர்கள் கூடுதல் பொறுப்பேற்று, நீண்டகால நோக்குடன் செயல்படவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை கூறினார். உலகின் மற்ற நாடுகளிலுள்ள பிரதான நில மேம்பாட்டாளர்கள் நிலப் பயன்பாட்டை அதிகப் படுத்துவதோடு மட்டுமன்றி சமுதாயத் தேவைகளையும் கவனத்தில் கொண்டு செயல் படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஃபுல்லர்டன் ஹோட்டலில் நடைபெற்ற நகர்ப்புற நிலக் கழக ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாட்டில் அரசாங்கத்தின் வருங்கால நகரமயத் திட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு திரு வோங் பதிலளித்தார். இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரப்புறத் திட்ட அமைப்பாளர்களும் நில மேம்பாட்டாளர்களும் நிலச் சொத்துப் போக்குகளைப் பற்றி கலந்து பேசக் கூடியுள்ளனர். தற்போது, சிங்கப்பூர் அரசாங்கம் பிரதான திட்ட அமைப்பாளராகச் செயல்பட்டு, ஒவ்வொரு நிலப் பகுதியாக நில மேம்பாட்டாளர்களிடம் விற்கிறது.