முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை வீட்டிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளும் ரூ.1.5 லட்சம் பணமும் திருட்டு போய்விட்டதாக போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு சிதம்பரத்தின் வீடு நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சிதம்பரம், சம்பவம் நிகழ்ந்தபோது டெல்லியில் இருந்ததாக கூறப்பட்டது. அவருடைய குடும்பத்தினரும் அப்போது வீட்டில் இல்லை. என்னென்ன பொருட்கள் திருட்டுப்போயின என்பது பற்றி விவரங்கள் வெளியிடப்பட வில்லை. இருந்தாலும் தங்கம், வைரம் போன்ற பரம்பரை நகைகள் காணாமல் போய் விட்டதாக தெரியவந்தது. திருட்டுச் சம்பவம் வியாழக் கிழமை நிகழ்ந்ததாகவும் இருந்தாலும் அது பற்றி சனிக் கிழமைதான் போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

திரு சிதம்பரம், புதுடெல்லியில் புதன்கிழமை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தார். தனக்கு எதிரான வழக்கு தொடர்பில் திரு சிதம்பரம் டெல்லி போகவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். சிதம்பரத்தின் நுங்கம்பாக்கம் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்தக் கோணத்தில் போலிசார் புலன்விசாரணை நடத்தி வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன. சிதம்பரத்தின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு உண்டு என்று தெரிவித்த ஒரு மூத்த போலிஸ் அதிகாரி, புலன்விசாரணை தொடர் வதாகவும் கூறினார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.