சபரிமலை: முதன்முறையாக பாதுகாப்புப் பணியில் பெண் போலிஸ்

வயது வித்தியாசமின்றி எல்லாப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபின் நேற்று இரண்டாம் முறையாக சபரிமலை நடை திறக்கப்பட்டது. கடந்த மாதம் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டபோது பத்து முதல் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து, கேரளா உட்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. எதிர்ப்பை மீறி பெண்கள் சிலர் சபரிமலைக்குச் செல்ல முயன்றபோதும் அவர்களின் முயற்சி ஈடேறவில்லை.

இந்த நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட இருந்தது. இன்றிரவு பத்து மணி வரை நடை திறக்கப் பட்டு இருக்கும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் உறுதி யாக இருக்கும் கேரள அரசாங் கம், சபரிமலையிலும் சுற்றுவட் டாரப் பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த முறை நடை திறக்கப் பட்டபோது போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியது போல இம்முறை அசம்பாவிதம் எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக கடும் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

சிறப்பு கமாண்டோ படையினர் உட்பட 2,300 போலிசார் ஆறு இடங்களில் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், முதன்முறையாக சன்னிதானம் பகுதியில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண் போலிசார் 15 பேர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கோட்டயத்தில் உள்ள எருமேலிக்கு நேற்று முன் தினம் மாலையே வந்துசேர்ந்து விட்டபோதும் பம்பைக்கும் சன்னிதானத்திற்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோபமடைந்த பக்தர்கள் நேற்றுக் காலையில் திடீரென மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.