மருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி

உலகில் நோய்நொடி இன்றி நீடித்து உயிர்வாழ விரும்பும் மனிதர்களில் பலரும் வசதியாக, சுகமாக வாழவேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்களே தவிர அந்த அளவுக்குத் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

இதன் காரணமாகவும் பரபரப்பான நவீன வாழ்க்கை பாணி, கலப்பு உணவு ஆகியவை காரணமாகவும் இப்போதெல்லாம் புதிய புதிய நோய்கள் அப்போதைக்கு அப்போது தலைகாட்டி வருகின்றன.

ஆகையால் மருத்துவர்களை நாட வேண்டிய தேவை, மருத்துவர்கள் இன்றி வாழ முடியாத நிலை பெரும்பாலான மக்களுக்குத் தவிர்க்க இயலாததாக ஆகிவிட்டது. அதோடு, சிங்கப்பூர் போன்ற மக்கள் தொகை மூப்படையும் சமூகத்தில் சுகாதாரப் பராமரிப்பு என்பது அதிக கவனம் செலுத்தவேண்டிய ஒரு துறையாக ஆகி இருக்கிறது.

இப்போது காலம் மாறிவிட்டது. முன்புபோல் மருத்துவர் சொல்வதை அப்படியே நம்பும் நிலையில் மக்கள் இல்லை. இணையத்தில் அவர்கள் பலவற்றையும் அறிந்துகொள்கிறார்கள். ஆகையால் இப்போதெல்லாம் அவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மருத்துவரைப் பார்க்கப்போகும் ஒருவர் ஏது ஆகுமோ என்ன ஆகுமோ என்ற அச்சம் சூழந்துகொள்வது இயல்புதான்.

அதோடு, தனக்கு என்ன நோய், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் மருத்துவரைப் பார்த்தபிறகும் ஒருவருக்குக் குழப்பாகவே இருக்கும் என்றால் அவருக்குச் சிக்கல் அதிகரித்துவிடும்.

அதே நேரத்தில், மருத்துவர் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தி, பொதுவான நடைமுறைகளை எல்லாம் விளக்கி, நோயாளிக்குத் தேவையான, அதே வேளையில் அவருக்குக் கட்டுப்படியாகக்கூடிய சிகிச்சையை அளித்து அல்லது பரிந்துரைத்து நோயாளியைத் தேற்றுவார் எனில் அதிலேயே பாதி நோய் பறந்துவிடும் வாய்ப்பு உண்டு. நோயாளியும் தன் நிலைக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளலாம்.

மருத்துவர் எவை எவற்றை எல்லாம் எந்த அளவுக்குத் தெரியப்படுத்தவேண்டுமோ அந்த அளவுக்குத் தெரியப்படுத்தவில்லை. அவர் தன்னிடம் இதைச் சொல்லவில்லை, அதை மறைத்துவிட்டார், தேவையில்லாமல் சிறப்பு சிகிச்சைக்கு அனுப்பி செலவு வைத்துவிட்டார். உடல் ஒத்துக்கொள்ளாத மருந்தை, சிகிச்சையை அளித்துவிட்டார். இதனால் தனக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் மருத்துவர் மீது நோயாளி புகார் தெரிவிக்கவேண்டிய நிலையும் ஏற்படாது.

இப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கி நோயாளி-மருத்துவர் இடையே நம்பிக்கையை உறுதிப்படுத்த அரசாங்கம் ஒரு பணிக்குழுவை அமைத்தது. அந்தக் குழு 29 பரிந்துரைகளைக் கொண்ட ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.

பொதுவான நடைமுறைகள் பற்றி நோயாளி களிடம் மருத்துவர்கள் எவை எவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டி நெறிமுறைகள் அந்தப் பரிந்துரைகளில் அடங்கி இருக்கின்றன.

மருத்துவர், நோயாளியின் சம்மதத்துடன் அவருக்கு சிகிச்சை அளிப்பது இந்த இருவருக்கும் இடையிலான நம்பிக்கையின் உயிர்நாடி. நோயாளிகள் கேட்கும் விவரங்களை மருத்துவர்கள் தெரிவிக்கத்தான் வேண்டும்.

தேவையில்லாமல் ஒரு குறிப்பிட்ட சிகிச்சையை நோயாளி செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஏற்புடையதல்ல. தனக்கு சட்ட ரீதியில் ஆபத்து ஏதேனும் வருவதைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் மருத்துவர்கள் நோயாளியை எடுத்த எடுப்பிலேயே சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி வைக்கும் போக்கையும் தவிர்க்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் தேவையில்லாத சிகிச்சைகளை நோயாளிகள் தவிர்த்துவிடலாம். செலவும் மிச்சமாகும்.

மொத்தத்தில் சுகாதாரப் பராமரிப்புச் செலவும் குறைந்து சமூகத்தின் சுமையும் குறையும். இதற்கு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் நம்பிக்கை அடிப்படையிலான உறவு மிக முக்கியமானது என்பதைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்த உறவைச் சமநிலைப்படுத்தி கட்டிக்காப்பதில் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்துக்கு முக்கியமான பணி இருக்கிறது.

சச்சரவுகளின்போது இந்த மன்றம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகள் எல்லாம் பொதுவாக நோயாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலேயே ஒருமித்த கவனம் செலுத்தி வந்துள்ளதைப் பார்க்கையில் அது நியாயமாகவே இருக்கலாம்.

அதேவேளையில், மருத்துவர்களின் நலன்களும் பாதுகாப்பட வேண்டும் என்பது முக்கியமானது. இதற்குப் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் பெரிதும் உதவும் என்பது நிச்சயம்.

ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் நியாயமற்ற வகையில் தாங்கள் தண்டிக்கப்படலாம் என்ற மருத்துவர்களின் அச்சம் அகல இந்த நெறிமுறைகள் உதவும்.

அதோடு மட்டுமின்றி, தேவையில்லாமல் மேலும் பல சிகிச்சை, மருந்துகளுக்கு பரிந்துரைக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் இந்த ெநறிமுறைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் இவை மருத்துவர்-நோயாளிக்கு இடையில் நம்பிக்கை யைப் பலப்படுத்தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!